Skip to main content

“எதிர்க்கருத்து கொண்டோரையும் பேச்சினால் இழுக்கும் சொல்வளமும், நாவன்மையும் கொண்டவர்...” - இரா.முத்தரசன்

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

He has the vocabulary to attract dissidents by speech  R. Mutharasan

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று (26.02.2021) காலை சிகிச்சை பலனிற்றி காலமானார். அவருக்குப் பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தா.பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழக அரசியலில் அறுபது ஆண்டுகளைக் கடந்து ஒளிவீசிய சிவப்பு நட்சத்திரம் உதிர்ந்துவிட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர், மதிப்புமிக்க மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்களைக் காலம் பறித்துக்கொண்டது. 26.02.2021 காலை 9.58 மணிக்கு சென்னை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவர் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள கீழவெள்ளை மலைப்பட்டியில் 18.05.1932ல் தா.பாண்டியன் பிறந்தார். அவரது பெற்றோர்கள் இருவருமே ஆசிரியர்கள். அவர்களது எட்டுக் குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்தனர். பத்து வயதிலேயே தேச விடுதலைப் போராட்டத்தின் ஈர்ப்பால், காவல் நிலையம் மீது கல்லெறிந்து தன் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். 1948ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட அடக்குமுறை காலத்தில் கைது செய்யப்பட்டவர். அதனால் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்த அவரது அண்ணன் தா.செல்லப்பா வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அண்ணனிடமே மார்க்ஸியம் கற்றதோடு, பள்ளி, கல்லூரிகளில் பயின்று முதுகலைப் பட்டமும் பெற்றார். 1953ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார். தான் படித்த அழகப்பா கல்லூரியிலேயே ஆங்கில விரிவுரையாளரானார். அங்கேயே அவருக்குத் திருமணம் நடந்தது. அவரது மனைவி திருமதி ஜாய்ஸ் பாண்டியனும் ஆசிரியர்தான். முதல் இரு பெண் குழந்தைகளும் காரைக்குடியில்தான் பிறந்தனர்.

 

1961ல், பேராசான் ஜீவாவின் முன்முயற்சியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தோற்றுவிக்கப்பட்டபோது, அதன் முதலாவது பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்தப் பணியை நிறைவேற்றுவதற்காக விரிவுரையாளர் வேலையிலிருந்து விலகி, சென்னை வந்தார். சட்டக் கல்லூரியில் மாணவரானார். பிறகு அவரது மனைவியும் குழந்தைகளோடு சென்னை வந்து, பள்ளி ஆசிரியை பணிதேடி அமர்ந்து, குடும்பத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

 

1962ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். 1964ல் கட்சி பிளவுபடுத்தப்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் நிலைத்து நின்ற தா.பாண்டியன், தொடர்ந்து கட்சியின் மாநிலச் செயற்குழு, தேசியக்குழு, தேசிய நிர்வாகக்குழு ஆகியவற்றுக்கு படிப்படியாக தேர்வு செய்யப்பட்டார்.

 

He has the vocabulary to attract dissidents by speech  R. Mutharasan

 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டின் சில தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக 1989 - 90 மற்றும் 1991 - 1996 என ஏழு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அவர் ஒரு சிறந்த தொழிற்சங்கத் தலைவர். ரயில்வே, துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களில் செயல்பட்டிருக்கிறார்.

 

1991ல் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜீவ்காந்தி படுகொலையுண்டபோது, மிகக் கடுமையான காயங்களுக்கு ஆளாகி நீண்ட காலம் மருத்துவமனையிலிருந்து உயிர் பிழைத்தார். அந்தக் குண்டுச் சிதறல்களை வாழ்நாள் முழுவதும் தாங்கியே வலம் வந்தார்.

 

திருவாரூரில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுக்குப் பின்னர், கட்சியின் மாநிலச் செயலாளராக 2005ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டு, 2015 வரை அப்பொறுப்பில் இருந்தார். தொடர்ந்து தேசியக்கழு உறுப்பினராக இறுதி மூச்சுவரை பணியாற்றினார். தமிழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர். எதிர்க்கருத்து கொண்டோரையும் பேச்சினால் இழுக்கும் சொல்வளமும், நாவன்மையும் கொண்டவர். தமிழ், ஆங்கில இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றவர். இலக்கியம், பொருளாதாரம், தத்துவம், வரலாறு, அரசியல் ஆகிய துறைகளில் பரந்த வாசிப்புக் கொண்டவர். இடையறாது படிப்பதும், படித்ததை சுவைகுன்றாமல் எளிதில் புரியும் வகையில் எடுத்துரைப்பதும் அவருக்கு இயல்பாக கைவந்தது.

 

பேசுவது போன்றே, ஈர்க்கும் எழுத்துவன்மை கொண்டவர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும், ‘ஜனசக்தி’யில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியவர். ஜனசக்தியில் ‘சவுக்கடி’, ‘கடைசிப் பக்கம்’ ஆகிய தலைப்புகளில் அவர் எழுதிய கட்டுரைகள் தீப்பறக்கும் தன்மை கொண்டவை. அதே நேரத்தில் அதனால் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கூட தேடிப்படிக்கும் அளவு மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியவை. ஜனசக்தியின் ஆசிரியராக இறுதி மூச்சுவரை அவர் பணியாற்றியுள்ளார்.

 

கட்சியின் மாநிலச் செயலாளராகப் பணியாற்றியபோது, கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான ‘பாலன் இல்லத்’துக்கு சென்னை, தி.நகரில் எட்டு அடுக்குகள் கொண்ட கம்பீரமான கட்டடத்தை, பல பிரச்சனைகளுக்கு இடையே கட்டி எழுப்பியது அவரது மறக்க முடியாத வாழ்நாள் சாதனைகளில் ஒன்றாகும். இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தின் குரூரமான தாக்குதலுக்கு ஆளானபோது, பயனுள்ள எதிர்வினை ஆற்றியவர். தமிழகத்தில் பல்வேறு சக்திகளை ஒன்றிணைத்து காலத்தில் அவர் எடுத்த முயற்சியால், சிங்கள எதிர்ப்பு தமிழர் பாதுகாப்புச் செயல்பாடு மீண்டும் சூடு பிடித்தது.

 

தமிழகத்தில் பகுத்தறிவு, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, அறிவியலை முன்னிலைப்படுத்துவது, சமூக நீதி ஆகியவற்றுக்காக நேர்க்கோடாக ஓங்கி ஒலித்த குரல் அவருடையது. மதவெறி, வகுப்புவாதத்துக்கு எதிராக “எனக்கு உயிர் இருக்கும் வரை என் நாவினால் அடித்து விரட்டுவேன்” என அண்மையில் மதுரையில் நடந்த அரசியல் எழுச்சி மாநாட்டில் பேசினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கூர்மையான எதிர்ப்பாளரான அவர், போருக்கு எதிரான, உலக மக்களிடையே ஒப்புறவுக்கான இயக்கங்களை நடத்தி தலைமை தாங்கியவர்.

 

இந்திய அரசியலைப் பாசிச சக்திகள் சூழ்ந்து, சாதி, மத பிளவுகளை விரிவுப்படுத்தி, மக்களைப் பிரித்து, இந்திய தற்சார்புப் பொருளாதாரத்தை சீரழித்து, தனியார் பெருமுதலாளிகளிடம் நாட்டின் எதிர்காலத்தை ஒப்படைத்து வரும் இன்றைய சூழலில், பழுத்த, அனுபவமிக்க, அரசியல் கூர்மை பெற்ற, மூத்த தலைவரான தா.பாண்டியனின் மறைவு முற்போக்கு, ஜனநாயக சக்திகளுக்கு பேரிழப்பாகும்.

 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது மதிப்புமிக்க, இணையற்ற தலைவரை இழந்துவிட்டது. தா.பாண்டியன் அவர்களது திருப்பெயர் என்றென்றும் நிலைக்கட்டும்! தா.பாண்டியன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி! செவ்வணக்கம்! செலுத்துகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு" எனக் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்