தென்காசி மாவட்டத்தின் ஆவங்குளம் காவல் நிலையத்திற்குட்பட்டது தென்காசி - நெல்லை சாலை. கேரளாவின் கொல்லத்திலிருந்து தொடங்கும் இந்த நாற்புற சாலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு மாலை 4.30 மணியளவில், தென்காசி – நெல்லை மெயின் ரோட்டில் இரண்டு பேர் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பின் சீட்டில் அமர்ந்திருப்பவர் கையில் ஜவுளி கடையின் பெரிய பை கொண்ட பார்சல் வைத்திருந்திருக்கிறார். இந்த பைக் ஆலங்குளம் மின்வாரிய அலுவலகம் வரும்போது எதிரே வந்த பைக்கில் மோதிவிட இரண்டு பைக்களிலும் வந்தவர்கள் கீழே விழுந்திருக்கிறன்றனர். அப்போது நெல்லை நோக்கி சென்ற பைக்கில் வந்தவர் வைத்திருந்த பெரிய பை, மோதியதில் ரோட்டில் விழுந்து சிதறியிருக்கிறது... சிதறியது கட்டுக்கட்டான பணம்.
பதற்றத்தில் அவர் அந்த பணக்கட்டுகளை அள்ளி எடுத்து பையில் திணித்து கொண்டிருந்ததை பார்த்த சிலர் ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறப்பு எஸ்.ஐ.யான பேச்சிமுத்து சம்பவ இடத்திற்கு வந்து பைக்கில் வந்த இருவரையும் பணத்தையும் கைப்பற்றி போலீஸ் நிலையம் அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்.
ஆலங்குளம் காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் பணி ஓய்வு பெற்று போய்விட்டார். முறையான எஸ்.ஐ.யும் ஸ்டேஷனுக்கு நியமனம் செய்யப்படவில்லை. காவல் நிலைய ஆய்வாளரும், எஸ்.ஐ.யும் இல்லாமல் அந்த ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ. மற்றும் போலீசார்களின் பொறுப்பிலிருந்திருக்கிறது.
எந்த ஒரு குற்ற செய்கை என்றாலும் பிடிபட்டவருடன் தொடர்புடையதையும் வைத்து பத்திரிகையாளர்களை வரவழைத்து படமெடுக்க வைத்து நடந்ததை தெரிவிக்கும் போலீஸ், இந்த சம்பவத்தில் அவ்வாறு செய்யவில்லை. பிடிபட்ட 2 நாட்களுக்கு பின்பு, ஜூலை 16ம் தேதி பைக்கில் வந்தவர்களை விசாரித்ததில் முன்னுக்குப்பின் முரணான தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.
அவர்கள் வைத்திருந்தது 34,71,320 ரூபாய் ஹவாலா பணம் என்று தெரிய வந்தது. செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் கடைகளுக்கு சப்ளை செய்து, வாரம் ஒருமுறை கலெக்ட் செய்யும் தொகை என்று அவர்கள் சொன்னதில் உண்மையில்லை. பிடிபட்டவர்களில் ஒருவர் காயல் பட்டினம் அருகேயுள்ள வடக்கு ஆத்தூரின் முகம்மது சேக் முனவரூதின், மற்றொருவர் மேலப்பாளையத்தின் முகைதீன் அசார் என்று மட்டுமே தெரிவித்திருக்கிறார்கள். இதுகுறித்து தகவலறிந்த தென்காசி மாவட்டத்தின் எஸ்.பி.யான சுகுணா சிங், தென்காசி நகரின் இன்ஸ்பெக்டர் ஆடிவேலை அனுப்பி மேல் விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார்.
இந்த நிலையில் பிடிபட்ட தொகை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட மறுகணமே ஆலங்குளத்தில் தகவல்கள் பறக்க ஆரம்பித்துவிட்டன. போலீஸ் வடிகட்டிச் சொல்கிறது. அவர்கள் பிடிபட்டு ஸ்டேஷன் கொண்டு வரப்பட்டபோதே காவல் நிலையத்தை வட்டமிடும் புரோக்கர்கள் இருவர், வேறு இரண்டு நபர்கள் உள்ளே போய் டீல் பேசியுள்ளனர்.
பிடிபட்ட பணத்தில் பெரும்பகுதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்கிற தகவலும் றெக்கை கட்டுகின்றன. மேலதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். “அதிகாரிகள் இல்லாத காவல் நிலையத்தில் திருடிவிட்டார்களா” என்றும் கேள்வி எழுப்புகின்றனர். இறுதியாக பிடிபட்டவர்களும் ஹவாலா பணத்துடன் நெல்லை வருமான வரித்துறையினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாம் இது குறித்து தென்காசி எஸ்.பி.யான சுகுணா சிங்கிடம் பேசியதில், “விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்திகள் விரைவில் தெரிய வரும்” என்கிறார். மக்களின் சந்தேகங்களைக் களைய வேண்டிய பொறுப்பிலிருக்கிறது காவல்துறை.