தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இருகட்டங்களாக அறிவிக்கப்பட்டு நேற்று முன்தினம் முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நாளை மறுநாள் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கான இரண்டாவது கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பரப்புரை நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இந்நிலையில் தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக மறுவாக்குபதிவு நடைபெறும் இடங்கள் என்னென்ன என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி திருவள்ளூர் கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. தூத்துக்குடியில் நெடுங்குளம் ஊராட்சியின் 1-வது வார்டில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதேபோல் நாகை சீர்காழி அருகே கூழையூர் கிராமத்தில் இருபதாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு முப்பதாம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. புதுக்கோட்டையில் விராலிமலை பதினைந்தாவது வார்டுக்கு உட்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தஞ்சையில் செம்மங்குடி ஊராட்சியில் 8 மற்றும் 9 வது வார்டுகளில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. மதுரையில் கொட்டாம்பட்டி ஊராட்சியில் சென்னகரம்பட்டி கிராமம் எட்டாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. கிருஷ்ணகிரியில் ஊத்தங்கரை ஒன்றியம் 21ஆம் வார்டில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குப் பெட்டிக்கு தீ வைப்பு மற்றும் வாக்குச் சீட்டில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தமிழகத்தில் இந்த இடங்களில் நாளை மறுநாள் மறுவாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாப்பரம்பாக்கத்தில் வாக்குப்பெட்டியை எரித்த சம்பவத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஒருவரின் மீது குண்டாஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பெட்டி எரிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பரந்தாமன் என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.