மதுரை வந்திருந்த குஜராத் மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஆன்லைனில் சார்ட்டர்ட் அக்கவுண்ட் படித்து வந்தார். ஆன்லைனில் சார்ட்டட் அக்கவுண்ட் குறித்து படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு மதுரையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இதற்காக குஜராத்தை சேர்ந்த அந்த மாணவி மதுரை வந்துள்ளார். மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.
இதேபோல் ஆன்லைன் வகுப்பில் அறிமுகமான சென்னை பெரம்பூரை சேர்ந்த அஷீஷ் ஜெயின், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெராம் கதிரவன் தங்கியிருந்துள்ளனர். அப்பொழுது குஜராத் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை சாக்காக எடுத்துக் கொண்டு மாணவிக்கு உதவுவதாக நடித்த மாணவர்கள் இருவரும் மருந்து கொடுப்பதாகக் கூறி மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்துள்ளனர். சிறிது நேரத்திலேயே மாணவி மயக்கமடைந்த நிலையில் இருவரும் தனித்தனியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மறுநாள் குஜராத்திற்கு சென்ற மாணவிக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். பிறகு மாணவி மதுரையில் நடந்த சம்பவத்தை பெற்றோருக்கு கூறிய நிலையில் அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். குஜராத்தில் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சம்பவம் மதுரையில் நிகழ்ந்துள்ளதால் மதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவி ஆன்லைன் மூலமாக மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயருக்கு புகார் அனுப்பினார். இது தொடர்பாக மாணவியிடம் வாட்ஸ்ஆப் வீடியோ காலில் மதுரை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.