கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகிலுள்ள பெரியசோழவள்ளியைச் சேர்ந்த சத்தியதாஸ் (26) என்பவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார்.
இவர், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில் அவர், “நான் பெயிண்டராக பணியாற்றி வருகிறேன். கடலூர் செல்லங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சத்யராஜ் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் தனக்கு நீதிபதிகள் மத்தியில் நல்ல நட்பு இருப்பதாகவும், அதன் மூலம் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தர முடியும் என்றும் அவ்வப்போது கூறுவார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாகக் கூறி அதில் வேலை வாங்கித் தருவதாக கூறினார். அதற்காக அவர் என்னிடம் ரூ.6.17 லட்சம் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற பணிக்கான பணி நியமன ஆணை வழங்கினார். ஆனால், உடனே ஊட்டி நீதிமன்றத்துக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே அங்கு செல்ல வேண்டும் எனவும் கூறி என்னை ஊட்டிக்கு அழைத்துச் சென்றார்.
ஆனால், ஊட்டியில் சில நாட்கள் விடுதியில் தங்க வைத்துவிட்டு, அதனைத் தொடர்ந்து சிதம்பரத்துக்கு மீண்டும் பணி மாற்றம் செய்வதற்கான ஆணை கிடைத்துள்ளது என தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த நான், சத்யராஜ் ஏமாற்றுவதை உணர்ந்துகொண்டேன். எனவே போலி பணி நியமன ஆணை கொடுத்து பண மோசடி செய்த சத்யராஜ் மீது நடவடிக்கை எடுத்து, நான் அவரிடம் கொடுத்த பணத்தை பெற்றுத் தர வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இம்மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி குற்றப்பிரிவு டி.எஸ்.பி கனகேசன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் துர்கா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சத்யராஜ் ஏமாற்றியது தெரியவந்தது. மேலும், விசாரணையில் சத்யராஜ் எம்.பி.ஏ பட்டதாரி என்பதும், அவரது நண்பர் கடலூர் கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரி செந்தில்குமாருடன் சேர்ந்து போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
செந்தில்குமார் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் நிலையில், அங்கு போலி பணி நியமன ஆணை தயார் செய்து ஏமாற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பட்டதாரிகள் சத்யராஜ் மற்றும் அவரது நண்பர் செந்தில்குமார் ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்ததுடன், செந்தில்குமாரின் கணினி மையத்தில் இருந்த கணினி உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.