இளைஞர்கள் இயற்கை மீது கொண்டுள்ள காதல் அதிகமாக உள்ளது. நீர்நிலைகளைப் பாதுகாத்தல்.. பாதுகாக்கப்படும் நீர்நிலைகளில் மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளில் ரொம்பவே ஆர்வமாக உள்ளனர். அதேபோல பனை விதைகள் விதைப்பதை தற்போது ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்கிறார்கள். கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5 லட்சம் பனை விதைகளை விதைத்தனர். அதில் பாதிக்கும் மேல் துளிர்க்கத் தொடங்கி உள்ளது. அதேபோல இந்த ஆண்டும் பனை விதைகளைச் சேகரித்து விதைக்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் வழக்கமாக பனை விதைகள் சேகரித்து விதைக்கும் கொத்தமங்கலம் பனசக்காடு பட்டதாரி ஆசிரியர் சி.அன்பரசன் தற்போது பனை விதைகளுடன் நாவல் விதைகளும் சேகரித்து விதைத்து வருகிறார். சுமார் 10 ஆயிரம் நாவல் மர விதைகளை அம்புலி ஆற்றங்கரைகளில் விதைக்க திட்டமிட்டு விதைகள் சேகரித்து விதைத்து வருகிறார்.
பனசக்காடு அம்புலி ஆற்றங்கரையில் நாவல் மர விதைகளை விதைத்துக் கொண்டிருந்த அன்பரசன் கூறும் போது, “வழக்கமாக பனை விதைகள் சேகரித்து பொது இடங்களில் விதைப்பேன். கடந்த ஆண்டு விதைத்த பனை விதைகள் துளிர்த்து வருகிறது. அதேபோல உணவுக்காக தடுமாறும் பறவைகள், குருவிகளுக்காக பழமரங்களை வளர்க்க நினைத்து இப்போது கிடைக்கும் நாவல் பழங்களின் விதைகளைச் சேகரித்து அம்புலி ஆற்றில் விதைத்து வருகிறேன். அதிலும் செடிகளுக்கிடையில் விதைகள் விதைத்தால் வேகமாகவும் பாதுகாப்பாகவும் வளரும் என்பதால் ஆற்றங்கரையோர செடிகளுக்கு மத்தியிலும் விதைக்கிறேன்.
நாவல் விதைகளை பல கிராமங்களுக்குச் சென்று சேகரித்து வருகிறேன். இந்த வருடம் சுமார் 10 ஆயிரம் நாவல்மர விதைகளாவது விதைக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.