Skip to main content

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு போக்கு காட்டும் அரசு!-ஏமாற்றுத்தனத்தின் உச்சக்கட்டம்!

Published on 27/09/2018 | Edited on 28/09/2018

‘இத்தனை மோசமாகவா தமிழக அரசின் நிர்வாகம் இருக்கிறது?’ என்று இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும்போது, நிச்சயம் முணுமுணுப்பீர்கள்.  

 

trans

 

தமிழகத்தில் பெரிய பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், 7 கோட்டங்கள், 21,744 பேருந்துகள், 1,37,408 தொழிலாளர்களைக் கொண்டது ஆகும். இதற்குமுன் 8 கோட்டங்கள் இருந்தன. சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், மதுரை கோட்டத்துடன் நெல்லைக் கோட்டத்தை இணைத்தனர்.

  

சம்பளத்தில் பிடித்ததெல்லாம் போயே போச்சு!

போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து   கடந்த 7 ஆண்டுகளாக வருங்கால வைப்புநிதி (Provident Fund) பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால், இந்தத் தொகையில் ரூ.7 ஆயிரம் கோடி ரூபாய் கருவூலத்தில் செலுத்தப்படவில்லை. கூட்டுறவு சங்கத்தில் கடனுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையும், அந்தக் கணக்கில் சேரவில்லை. 

 

trans

அரசு தந்த உத்தரவாதம் அம்போ!

ஊதிய உயர்வு வழங்கப்படாததைக் கண்டித்து, கடந்த ஜனவரியில் போக்குவரத்து தொழிலாளர்கள் 8 நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இதனால், தமிழகம் முழுவதும் போக்குவரத்து சேவை முடங்கியது. இதனால் பொதுமக்களுக்கு நெருக்கடி ஏற்பட, இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே,  ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமனம் செய்தது உயர் நீதிமன்றம். அது தைப்பொங்கல் பண்டிகை காலம் என்பதால், பொதுநலன் கருதி, போராட்டத்தை வாபஸ் பெற்றார்கள் தொழிலாளர்கள். தமிழக அரசும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வைப்பு நிதியைக் கண்டிப்பாக செலுத்திவிடுவோம் என்று உத்தரவாதம் அளித்தது. ஆனால்,  சொன்னபடி நடந்துகொள்ளவில்லை. இப்போது நிதி இல்லை என்று கூறிவிட்டதால்,  தொழிலாளர்கள் மீண்டும்  போராட்ட களத்திற்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். 

 

தொழிலாளர்களின் வைப்பு நிதியை அவர்களின் கணக்கில் செலுத்திவிடுவோம் என்று நீதிமன்றத்தில் அன்று ஒப்புதல் அளித்தார் அரசுத் தலைமை வழக்கறிஞர்.  இன்றோ, அரசிடம் பணம் இல்லை, உங்கள் துறையில் இருந்தே செலுத்திவிடுங்கள் என்று போக்குவரத்துத்துறையின் அனைத்துக் கோட்ட மேலாளர்களுக்கும்  கடிதம் அனுப்பியிருக்கிறார் போக்குவரத்துத்துறை செயலாளர் டேவிதார். 

 

trans

 

தலைமைச் செயலகம் முற்றுகை! மீண்டும் வேலை நிறுத்தம்!

இன்னொரு விவகாரமும் உண்டு. தொ.மு.ச. தொழிற்சங்க செயலாளர் சண்முகம் “30-11-2017 வரை ஓய்வு பெற்றவர்களுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வரை பணப்பலன்களை வழங்கிய தமிழக அரசு, 1-12-2017 முதல் இன்று வரையிலும் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்களை வழங்கவில்லை. இவர்களுக்கு 12 சதவீத வட்டியுடன் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அரசு அந்த உத்தரவைக் கண்டுகொள்ளவில்ல. எங்களின் கோரிக்கையை முன்வைத்து, அக்டோபர் 4-ஆம் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம். இதில் தீர்வு ஏற்படவில்லை என்றால், மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவோம்.” என்கிறார். 

 

trans

குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடும்!

போக்குவரத்து தொழிலாளர் ஒருவர் “ஏற்கனவே வைப்பு நிதியை செலுத்திவிடுவோம் என்று கோர்ட்டில் சொல்லிவிட்டு, இப்போது பணம் இல்லை என்றால், இரவு பகல் பாராது பேருந்தை ஓட்டி உழைத்த நாங்கள் குடும்பத்தோடு நாளைக்கு நடுத்தெருவில் நிற்க வேண்டியது வரும்.” என்றார். ஏழு கோட்டங்களின் கீழ் செயல்படும் ஒட்டுமொத்த போக்குவரத்து தொழிலாளர்களின் குமுறலும் இதுதான்.

 

trans

நடுங்க வைக்கும் நஷ்ட புள்ளி விபரம்!

அரசு வருவாயில் 56.4 சதவீதம் ஊழியர்களின் சம்பளத்திற்கும், 27.72 சதவீதம் டீசலுக்கும், 3 சதவீதம் பராமரிப்புக்கும் செலவிடப்படுகிறது. இதுதவிர, சுங்க கட்டணத்திற்கு 6.31 சதவீதம், ஏற்கனவே வாங்கிய கடனுக்கு 8.17 சதவீதம் வட்டியும் செலுத்தப்படுகிறது. இதனால், நாள் ஒன்றுக்கு ரூ.9 கோடி வரை நஷ்டத்தைச் சந்தித்துவருவதாக அரசாங்கமே கூறுகிறது.  

 

கல்லா கட்டும் தனியார் பேருந்துகள்! 

பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகையின்போது, சிறப்பு பேருந்துகளை இயக்குவதாகச் சொல்கிறது அரசு போக்குவரத்துக் கழகம்.  அரசு தரும் புள்ளிவிபரமோ, இதிலெல்லாம் வருவாய் அதிகரிக்கவில்லை எனச் சொல்கிறது.  கடந்த ஆண்டில், பொங்கல் நேரத்தில், 13,337 பேருந்துகளை இயக்கியதன் மூலம் ரூ.95 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு, 13,407 சிறப்பு பேருந்துகளை இயக்கி, ரூ.75.80 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது. ஆனாலும், அரசு சொல்லும் கணக்கைப் பார்த்தால்,  தனியார் ஆம்னி பேருந்துகள்தான் அதிகம் கல்லா கட்டியிருக்கிறது என்பது தெளிவாகிறது.   

 


ஊழலும் ஊதாரித்தனமும்..

தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் எப்போதும் லாபத்தில் இயங்கும்போது, அரசு போக்குவரத்துத்துறை மட்டும் நஷ்டத்தை சந்திக்கிறது என்றால், இதற்குக் காரணம் ஊழலும் ஊதாரித்தனமும்தான் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.   

 

பெரும் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துத்துறையும், போக்குவரத்து தொழிலாளர்கள் பட்டுவரும் அவஸ்தைகளும், தமிழக அரசின் நிர்வாகத்திறன் இன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. 

சார்ந்த செய்திகள்