தமிழ் புத்தாண்டையொட்டி, சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு இன்று (14/04/2022) மாலை 05.00 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்தளித்தார்.
ஆளுநரின் தேநீர் விருந்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்றனர். அ.தி.மு.க. சார்பில் தங்கமணி, வேலுமணி, தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். அதேபோல், பா.ஜ.க. சார்பில் அண்ணாமலை, வானதி சீனிவாசன், குஷ்பூ உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். பா.ம.க. சார்பில் சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
எனினும், ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்காமல் தமிழக அரசு மற்றும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தன. குறிப்பாக, காங்கிரஸ், ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.ம.க., தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணித்தனர். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் தாமதம் செய்வதைக் கண்டித்து, தி.மு.க., மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., காவல்துறை தலைவர் முனைவர் சைலேந்திர பாபு இ.கா.ப. ஆகியோரும் தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை.
முன்னதாக, ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியையும் ஆளும் தி.மு.க. அரசும், அதன் கூட்டணி கட்சிகளும் புறக்கணித்தன. பாரதியார் சிலைக்கு கீழ் உள்ள கல்வெட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் இடம் பெற்றுள்ளது.