இன்று மாலை தமிழக ஆளுநர் தரும் தமிழ் புத்தாண்டு தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளது.
இன்று ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ''நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து ஆளுநரைச் சந்தித்து பேசினோம். நீட் எதிர்ப்பு மசோதாவின் மீது ஒப்புதல் அளித்து ஒன்றிய அரசுக்கு ஆளுநர் அனுப்பிவைக்க வேண்டும் என்றும், இது தொடர்பான வலியுறுத்தலை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆளுநருக்கு கொடுக்கவேண்டும் என முதல்வர் நேரில் வலியுறுத்தியிருந்தார். இத்தனைக்கு பிறகும்கூட அந்தச் சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் தனது ஒப்புதலைத் தரவில்லை. இதனால் சட்டமன்றத்தின் மாண்புகள் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற மாண்புகளையும், தமிழக மக்களையும் ஆளுநர் மதிக்கவில்லை. தற்பொழுதுவரை ஆளுநர் இதுகுறித்து எந்த உத்திரவாதத்தையும் எங்களுக்கு வழங்கவில்லை. எனவே ஆளுநர் கொடுக்க இருக்கும் தேநீர் விருந்து நிகழ்விலும், பாரதியார் சிலை திறப்பு நிகழ்விலும் தமிழக அரசு பங்கேற்காது'' என்றார்.
தற்பொழுதுவரை 11 சட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அதில் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதா-2022 (இரண்டாவது முறையாக சட்டமன்றம் கூடி நிறைவேற்றிய மசோதா), பாரதியார் பல்கலைக்கழகத்திற்குக் கீழ் வரும் சுயநிதி கல்லூரிகளில் இருந்து 5 உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான சட்டத்திருத்த மசோதா-2021, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களுக்கான சட்டத்திருத்த மசோதா. இந்த மூன்று மசோதாக்களும் திமுக ஆட்சியில் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளவை.
கடந்த அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட மீன்வள பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க வழிசெய்யும் மசோதா-2020, கால்நடை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க வழிசெய்யும் மசோதா-2020, டிஎன்பிஎஸ்சி தேர்வில் பொதுத்தமிழை சேர்க்க வழிவகை செய்யும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்ட மசோதா-2020, மாநில சட்ட ஆணைய பரிந்துரைப்படி சில சட்டங்களை ரத்து செய்யும் மசோதா-2020, சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கக் கூடிய தேர்வு கமிட்டியை தேர்வு செய்வது தொடர்பான சட்ட மசோதா, அண்ணா பல்கலைக்கழகத்தைப் பெயர் மாற்றம் செய்வது தொடர்பான சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 8 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.