
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவையின் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றே குறைந்தவர்கள் அல்ல... ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தார். ஆளுநரின் இந்த செயல் மக்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி இருந்தது.
இத்தகைய சூழலில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் பயணமாக டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தின் போது ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் பலராலும் உற்று கவனிக்கப்படுகிறது.