ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடிக்கு மக்கள் எதிர்ப்பு!
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், மாநில அரசுக்கும் இடையே இருக்கும் பிரச்சனைக்கு முடிவு இல்லாமல் போய்விட்டது. பொதுவாக யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களுக்கு நிர்வாக அதிகாரமும் இருப்பதால், அரசின் ஆட்சி அதிகாரத்திலும் பங்கு கேட்பதும், முக்கிய கோப்புகளை நகரவிடாமல் செய்வதிலும் ஆளுநர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
அந்த வகையில், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் அம்மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவதும், அதற்கு மாநில அரசு தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுமாக காட்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், ஆளுநர் கிரண்பேடி வழக்கமாக வாராந்திர ஆய்வு மேற்கொள்வதற்காக சென்றிருந்தார்.
பிள்ளையார்குப்பம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது "திட்டங்களை தடுக்கும் ஆளுநர் புதுச்சேரிக்கு தேவையில்லை" என காங்கிரசார் கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம் விலையில்லா அரிசி உள்ளிட்ட திட்டங்களுக்கு கிரண்பேடி தடையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டி மக்களும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆளும் மத்திய அரசின் ஆதிக்கம் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களை நியமித்து, அந்தந்த மாநில நிர்வாகத்தை ஆட்டிப் படைப்பது புதிதான ஒன்றும் இல்லை. புதுச்சேரியில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தமிழகத்தில்?
- சுந்தரபாண்டியன்