Skip to main content

“நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்"  - அமைச்சர் எ.வ. வேலு

Published on 13/08/2023 | Edited on 13/08/2023

 

The Governor is holding back on the issue of NEET exam  Minister AV Velu

 

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி எண்ணித் துணிக என்ற தலைப்பில் மாணவர்கள், குடிமைப் பணிக்கு தேர்வானவர்களுடன் அவ்வப்போது உரையாடல் நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் இளநிலைத் தேர்வில் 720 க்கு 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்கள், ஆளுநருடன் முதல் முறையாக உரையாட சுமார் 100 பேர் சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்திற்கு நேற்று அழைக்கப்பட்டிருந்தார்கள்.

 

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சேலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை அம்மாசியப்பன் என்பவர் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் தமிழகத்தில் உள்ள மாணவர்கள் சார்பாக நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். எனவே நீட் தேர்வில் இருந்து எப்போது விலக்கு கொடுப்பீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அப்போது அங்கு இருந்த ஆளுநர் மாளிகை ஊழியர்கள் அவரை உட்காருங்கள் என அதட்டி அவரிடம் இருந்து மைக் பறிக்கப்பட்டது.

 

பெற்றோரின் கேள்விக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதிலளிக்கையில் “நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது மாணவர்களின் போட்டி போடும் திறனைக் கேள்விக்குறியாக்கும். நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்க வேண்டும் என அவசியமில்லை. நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தெரிவித்து ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன்” எனத் தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர்கள் ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்த ஆளுநரின் பேச்சுக்கு அமைச்சர் எ.வ. வேலு கருத்து தெரிவிக்கையில், “ தமிழக அரசைப் பொருத்தவரை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்தான்  கிராமப்புற மாணவர்களும் மருத்துவர் ஆக முடியும். நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் கொள்கையை வைத்துக்கொண்டு ஆளுநர் ஆர்.என். ரவி அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்