கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய சமூக நல விரிவாக்க அலுவலராக பணி செய்து வந்தவர் ஜெயபிரபா (58). இவர் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் பணி செய்து வருகிறார். இவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவிந்தராஜ் என்பவர் தனது உறவினர் பெண்ணுக்கு திருமண உதவி திட்டத்தின் மூலம் பயன் பெறுவதற்காக முறைப்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். பொதுவாக இதுபோன்ற ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து இருந்தாலும் அந்த விண்ணப்பத்தின் பேரில் சம்பந்தப்பட்ட மணமகன் மணமகள் வீட்டாருக்கு சமூக விரிவாக்க அலுவலர்கள் வீட்டுக்கு வந்து விசாரணை செய்து உதவித்தொகை கிடைக்க உறுதி சான்று அளிப்பது வழக்கம். இவர்கள் உறுதி சான்று எடுத்து பரிந்துரை செய்த பிறகே அரசு நிதி உதவியை வழங்கும்.
இதை பயன்படுத்தி தமிழகத்தில் பெரும்பாலான சமூக விரிவாக்க அலுவலர்கள் மணமகள் வீட்டாரிடம் பணம் பிடுங்குவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். அதிலும் இந்த ஜெயபிரபா இரண்டு நாட்களில் ஓய்வு பெறும் நிலையில் இருந்ததால் கடந்த சில மாதங்களாகவே தீவிரமான வசூல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். இதற்காகவே திருமண உதவி கேட்டு விண்ணப்பித்தவர்களின் வீடு வீடாக சென்று விசாரணை என்ற பெயரில் அவர்களிடமிருந்து பணம் பிடுங்கும் நோக்கில், மண்டபத்தில் திருமணம் நடைபெற்று இருந்தால் நீங்கள் வசதியானவர் உங்களுக்கு எப்படி உதவி தொகை கிடைக்கும் என்று பல்வேறு முரணான கேள்விகளை கேட்டு பெண்ணின் பெற்றோர்களை திணறடித்து, அதையெல்லாம் சரி செய்து தருவதாக கூறி குறைந்தபட்சம் ரூ. 3000 மேல் பணம் பறித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கோவிந்தராஜ் என்பவர் ஜெயபிரபாவின் அதிரடியான பேரம் பேசி பணம் கேட்டதை பொறுக்கமுடியாமல் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து கோவிந்தராஜ் திருமண உதவித் தொகைக்காக ஜெயபிரபாவிடம் லஞ்சம் கொடுப்பதை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.இந்த செய்தி விருத்தாசலத்தில் மட்டுமல்ல தமிழகம முழுவதும் பரபரப்பாகியுள்ளது.
ஒரு பெண்ணை பெற்று வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்து கொடுப்பது என்பது இப்போதுள்ள விலைவாசியில் எவ்வளவு பெரிய சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் அரசு திருமண உதவி திட்டம் மூலம் கொடுக்கும் தொகை அப்படி பட்ட பெற்றோர்களுக்கு அவர்கள் செய்யும் செலவில் சிறிதளவு ஈடுகட்ட முடியும் என்பதால் அரசுக்கு விண்ணப்பிக்கிறார்கள். அங்கேயும் பணம் வசூலிக்கப்படுவது வேதனைக்குரியது. இந்த கைது சம்பவம் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலர் அலுவலகங்களிலும் இதுபோன்ற சமூக விரிவாக்க அலுவலராக உள்ள பெண்களின் ஈவிரக்கமற்ற வசூல் வேட்டைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமா? என்று பொருத்திருந்து பார்க்கலாம்.