தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கும் அரசுக்கு ஈடான ஊதியத்தை வழங்க வேண்டும்: வேல்முருகன்
அரசு மருத்துவமனைச் செவிலியர்களுக்கு ஈடான ஊதியத்தை அனைத்து செவிலியர்களுக்கும் உறுதிப்படுத்துமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“உயிர் காக்கும் மருத்துவம்” என்று சொல்வதிலிருந்தே அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரம் அந்த மருத்துவத் துறையில் பணியாற்றும் தனியார் மருத்துவமனைச் செவிலியர்களோ உயிர் பிழைக்கவும் முடியாத நிலையில்!
அத்துக்கூலிக்கே அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது ஒட்டச் சுரண்டல் அன்றி வேறென்ன? வெறும் 6,000, 7,000, 8,000 என்ற அளவில்தான் தனியார் மருத்துவமனைகளில் செவிலியர்களின் மாத ஊதியம். மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருப்பவர்கள் என்றால் 10,000 வழங்கப்படுவதாகத் தெரிகிறது; அதுவும் அரிதாகத்தான்.
மேலும் அவர்களின் பணி நேரம் சட்டப்படியான அளவை விடவும் அதிகமாக இருப்பதால், மனித உரிமைகளுக்கு எதிராக அவர்கள் வதைக்கப்படுகிறார்கள் என்றும் ஆகிறது.
இந்த ஊதியம் பணியில் உள்ள அந்த செவிலியருக்கு மட்டுமாவது போக்குவரத்துச் செலவு, சாப்பாட்டுச் செலவு, தங்குமிடச் செலவு போன்ற அத்தியாவசியச் செலவுகளுக்காவது போதுமா என்றால் போதாது என்பதுதான் வெளிப்படை. மேலும் இந்தப் பணிக்கான பட்டயப் படிப்பிற்காகப் பெற்ற கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்குக்கூட இந்த ஊதியம் உதவவில்லை.
இப்படி நியாயமான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது தெரிந்தும் அதைப் பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்துவருகிறது அரசு. கடந்த 2013ஆம் ஆண்டில் இப்போதிருக்கும் கூலியை விடவும் குறைவாகவே இருந்தது. அதனால் தமிழகமெங்கும் தனியார் மருத்துவமனைச் செவிலியர்கள் போராட்டத்தில் இறங்கினர். அதன் காரணமாகவே இப்போதிருக்கும் இந்த ஊதியம்.
இந்த ஊதியத்தை ஏற்றுக் கொள்ளாமல், வேறு வழியும் இல்லாமல் இருந்துவரும் நிலையில்தான் உச்ச நீதிமன்றம் செவிலியர்களின் வாழ்நிலையை ஆய்வு செய்து அவர்களுக்கென்று ஊதியக் குழுவை அமைக்குமாறு நடுவண் அரசுக்கு உத்தரவிட்டது.
அந்தக் குழு தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தை பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரைகளை அவசர அவசியமாக அமல்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றுமாறு 29.09.2017 அன்று அனைத்து மாநில அரசுகளுக்கும் நடுவண் அரசு கடிதம் அனுப்பியது.
ஆனால் கேரளம் தவிர வேறு எந்த மாநிலமும் இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. கேரள அரசு ரூ.20,000 குறைந்தபட்ச ஊதியமாக அறிவித்திருப்பதுடன் அதிவிரைவில் ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, 50 படுக்கைகளுக்கு குறைவாக உள்ள மருத்துவமனைகளில் ஊதியம் ரூ.20,000. 50 முதல் 100 படுக்கை வரை உள்ள மருத்துவமனைகளில் அரசு செவிலியர் பெறும் ஊதியத்திலிருந்து 25% குறைவு. 100 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளில் 10% குறைவு. 200 படுக்கைகளுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளில் அரசு செவிலியர் ஊதியத்திற்கு ஈடான ஊதியம்.
ஊதியக் குழுவின் இந்தப் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்தவில்லை என்றால் வரும் 11.10.2017ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் இறங்கப் போவதாக தனியார் மருத்துவமனைச் செவிலியர்கள் அறிவித்துள்ளார்கள். தமிழகமெங்கும் இப்போது டெங்குக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில் நோயாளிகளைக் கவனிக்க செவிலியரின்றி நிலைமை படுமோசமாகக்கூடும்.
எனவே தமிழக அரசு இதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாதவாறு அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இதில் கேரள அரசு போல் தமிழக அரசு செயல்பட வேண்டும்; அவசரச் சட்டமே இயற்றி ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்; இன்னும் சொல்வதென்றால், பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் விதத்தில், அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியத்தையே அனைத்து செவிலியர்களுக்கும் நிர்ணயிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.