ஒட்டன்சத்திரத்தில் அரசு தொழிற்பயிற்சி கல்லூரி அமைக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துக் கொண்டு பேசுகையில், "தமிழக முதலமைச்சரின் 13 மாத ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி இந்தியாவின் முன்னோடி முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் ஆறு கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் கூடிய விரைவில் ஒட்டன்சத்திரத்தில் அரசு தொழிற்பயிற்சி கல்லூரி அமைக்கப்படும்.
மேலும், 12.12 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள் தினமும் பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்து மக்கள் மனதை வெல்ல வேண்டும்" என அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன், உதவி ஆட்சியர் தினேஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, நகர்மன்றத் துணைத் தலைவர் வெள்ளச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.