ஈரோடு மாவட்ட டாஸ்மாக் அனைத்துத் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம், ஈரோடு சி.ஐ.டி.யு அலுவலகத்தில் 4ஆம் தேதி நடைபெற்றது. சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். அதில், எங்கள் மூலமாக அரசுக்கு வருவாய் வருகிறது. எனவே தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் தமிழக அரசு 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கும் குடும்பங்கள் உள்ளது. ஆகவே எங்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
டாஸ்மாக் கடைகளின் நேரத்தை இரவு 10 மணி வரை அரசு நீடித்துள்ளது. இரவு 10 மணிக்கு கடையைப் பூட்டி விற்பனையை நிறுத்தினாலும் அன்றைய கணக்கு வழக்குகளை முடித்து வீட்டுக்குச் செல்ல, இரவு 12 மணியாகிறது. விற்பனையான பணத்தைப் பாதுகாக்கவும் அச்சுறுத்தல் உள்ளது. ஆகவே இரவு 8 மணிக்கு கடையை மூட அரசு மீண்டும் உத்தரவிட வேண்டும். ஊழியர்கள் மீதான தொழிலாளர் விரோதப் போக்கினை கைவிட வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்கள்.
மேலும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வருகிற 6ஆம் தேதி ஈரோட்டில் அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தப் போவதாக அறிவித்தனர். கூட்டத்தில் எல்.பி.எஃப் கோபால், முருகேஷ், சி.ஐ.டி.யு பாண்டியன், பொன்.பாரதி, டி.என்.எஸ்.சி, எஸ்.டி குப்புசாமி மற்றும் கூட்டுக்குழு நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.