தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக தீவிரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் மூடப்பட்டு இருந்தபோதிலும் துரித பார்சல்கள் மற்றும் உணவுகள் ஆர்டர் செய்வது போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை கீழ்ப்பாக்கம் ஆவடி சாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்யும் கோடம்பாக்கத்தை சேர்ந்த பிரசன்னா என்ற இளைஞரை போலீசார் மடக்கி விசாரணை செய்தனர்.
உணவு சேவைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் உணவு எந்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பது தொடர்பாக போலீசார் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணான பதிலை அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர் கொண்டு வந்த பார்சலை சோதனையிட்டபோது, உணவு எடுத்துச் செல்லும் பெட்டியில் பத்துக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் உணவுகளை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களின் தகவல்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கு மது வினியோகம் செய்ய இவ்வாறு மது பாட்டில்களை எடுத்து வந்ததாக கூறியுள்ளார். இதன் பிறகு அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை எச்சரித்து காவல் நிலைய ஜாமீனில் விட்டனர்.