உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் தலித் பெண் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், அவரது உடலை அவரின் பெற்றோரிடமும்கூட கொடுக்காமல் காவல்துறையே தகனம் செய்ததும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் சமூக அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வி.சி.க. மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ந.செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பொருளாளர் முகமது யூசுப், துணைப் பொதுச் செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, கவுதம சன்னா, வன்னி அரசு, ஆளூர் ஷாநவாஸ், இளஞ்சேகுவேரா, மாவட்டச் செயலாளர்கள் இரா.செல்வம் பெ.ரவிசங்கர் வி.கோ.ஆதவன், பு.அன்புச்செழியன் ச.அம்பேத்வளவன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் நம்மிடம் பேசிய வி.சி.க. மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ந.செல்லத்துரை, "ஹத்ராஸ் பகுதியில் தலித் பெண் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார். அதன்பின், அப்பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின் அவரது உடலை பெற்றோர்களிடம் ஒப்படைக்காமல் காவல்துறையினரே தகனம் செய்கிறார்கள். இந்த விவகாரம் நாடு முழுக்கப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியின் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், அப்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அவர் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து இருக்கிறார் எனத் தெரிவிக்கிறார். இது தடையத்தையும் உண்மையையும் அழிக்கும் செயல் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தச் சமயத்தில் அந்த மாநிலத்தின் முதல்வர், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல், நிவாரண நிதி எதுவும் வழங்காமல், அதை நியாயப்படுத்தும் வகையில் ‘இது அரசைக் கலங்கப்படுத்தக்கூடிய போராட்டமாகப் பார்க்கிறேன் என்றார். மேலும், இந்தப் போராட்டம் தொடர்ந்தால், வழக்குகள் தொடரப்படும்’ என ஆளுங்கட்சியினர் மிரட்டுகின்றனர்.
இதை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. ஐ.நா.வே நேரடியாகத் தலையிட்டு இந்த விஷயத்தைக் கண்டித்த பிறகும், பிரதமர் மோடி கண்டனத்தையோ வருத்ததையோ தெரிவிக்காதது மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. ஆகவே பிரதமர் மோடியையும் வி.சி.க கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்கு ஆறுதல் சொல்லவந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தள்ளிவிட்டு அச்சுறுத்துகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியிடம் போலீஸார் நடந்துகொண்ட விதத்தையும் வி.சி.க கண்டிக்கிறது. மனித உரிமை மீறலில் காவல்துறை ஈடுபடுகிறது. சிறுபான்மை மக்களுக்கும் தலித் பெண்களுக்கும் தலித்களுக்கும் பாதுகாப்பு தரமுடியாத, ஜனநாயக விரோத ஆட்சியை உடனடியாக 356-ஆவது பிரிவைப் பயன்படுத்தி மோடி அரசு டிஸ்மிஸ் செய்யவேண்டும் என வி.சி.க வலியுறுத்துகிறது.” எனத் தெரிவித்தார்.