தமிழ்நாட்டில் குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனாலும், பல இடங்களில் அவை விற்பனை செய்யப்படுகின்றன. அதனால், மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அதற்கு அடிமையாகி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் அருகில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதையடுத்து, கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள கடைகளில் போலீசார் அதிரடி சோதனை செய்து மறைத்துவைத்து விற்கப்பட்ட போதை பொருட்களைப் பறிமுதல் செய்து, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், குமரி மாவட்டம், அழகியமண்டபம் அருகில் உள்ள தனியார் கலைக்கல்லூரி அருகில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பொருளைப் பதுக்கிவைத்திருப்பதாக தக்கலை போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, நேற்று (26.11.2021) மாலை இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் ஆகியோர் சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை செய்ததில், அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 150 கிலோ குட்காவைப் பறிமுதல் செய்து, வீட்டின் உரிமையாளர் முகம்மது சாலியை கைது செய்தனர்.
மேலும், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், குட்காவை வீட்டில் பதுக்கிவைத்து, அவர் நடத்திவரும் கடையில் கொஞ்சம் கொஞ்சமாக விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். அதையடுத்து, முகம்மது சாலி மீது வழக்குப் பதிவுசெய்து அவரை சிறையில் அடைத்தனர்.