விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்திற்குட்பட்ட கொல்லூர் என்ற கிராமத்தில், சுமார் 5,000 பேர் வசித்து வருகின்றனர். இந்த ஊரில், சுமார் 800 குடும்ப அட்டைகள் உள்ளன.
கொல்லூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்குவதற்காக, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது, அங்குவந்த முகையூர் வேளாண்மை வட்டார விரிவாக்க மைய அலுவலர்கள் சிலர், பொதுமக்களிடம் இருந்து குடும்ப அட்டைகளை வாங்கி ஆய்வு செய்தனர். பின்னர் அவர்களிடம், 'பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடாகப் பணம் பெற்றவர்களா நீங்கள்?' எனக் கேட்டு கடை ஊழியர்கள் கொடுத்த (அரசின்) 2,500 ரூபாய் பணத்தில், ஆயிரம் ரூபாய் பணத்தைக் கந்துவட்டி வசூலிப்பவர்கள் போல பிடுங்கிக் கொண்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், திடீரென்று ஒன்றுகூடி ரேஷன் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பணம் பிடுங்கிக் கொண்டிருந்த வேளாண்மை அலுவலர்களுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விரிவாக்க அலுவலர்கள் பொதுமக்களிடம் எங்கள் மேலதிகாரிகள் எங்களுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகையில், 1,000 ரூபாய் பணத்தை வசூல் செய்யச் சொன்னதாகத் தெரிவித்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விரிவாக்க அலுவலக ஊழியர்கள் செயல் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடை வைத்துள்ளது.
இதுகுறித்து, உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகக் கிராம மக்கள் கூறுகின்றனர்.