Skip to main content

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கறுப்புக்கொடி ஏந்தி தர்ணா!

Published on 23/03/2021 | Edited on 23/03/2021

 

government medical college students in chidambaram

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தமிழகத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் தொடர்ச்சியாக 58 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடந்த பிப்ரவரி 4- ஆம் தேதி முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை இந்த ஆண்டு முதல் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.

 

அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தைச் செலுத்திய போது பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களிடம் ஏற்கனவே வசூலித்த பழைய கட்டணத்தைச் செலுத்த வேண்டுமெனக் கூறியதாகத் தகவல் கூறுகின்றன. இதனால் வேதனையடைந்த மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில் ராஜா முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உயர் கல்வித்துறையிலிருந்து தமிழக நல்வாழ்வு மருத்துவத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், தற்போது தேர்வை தமிழக அரசின் சுகாதாரத்துறை நடத்தாமல் பல்கலைக்கழக நிர்வாகம் நடத்துகிறது.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் இன்று (23/03/2021) பல்கலைக்கழகப் பதிவாளர் அலுவலகம் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அரசாணை 45- ஐ அமல்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு தேர்வை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கியதிலிருந்து 90 ஆண்டுகால வரலாற்றில் மாணவர்கள் தேர்வைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தியது இதுவே முதல் முறை ஆகும்.

 

 

 

சார்ந்த செய்திகள்