நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி பிரிவிலிருந்து வர்த்தக ரீதியாக மின் சக்தியை விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் மணிக்கு 10 லட்சம் யூனிட் (1000 மெகாவாட்) மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் கொண்ட முதல் மின் உற்பத்தி பிரிவு வர்த்தக ரீதியான மின்சக்தியை விற்பனை செய்ய 2019 டிசம்பர் 28-ஆம் தேதி தகுதிபெற்றது. அதனைத் தொடர்ந்து 500 மெகாவாட் திறன் கொண்ட இரண்டாவது பிரிவும் நேற்று முன்தினம் (10.02.2021) நள்ளிரவு முதல் மின்சக்தியை விற்பனை செய்ய மத்திய அரசிடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளது.
இதன்மூலம் ‘அனல்மின் திட்டம்’ என்ற நிலையில் இதுவரை இருந்து வந்த இந்த மின் நிலையம், தற்போது ‘அனல் மின் நிலையம்’ என்ற தகுதியைப் பெற்றுள்ளது. இந்தப் புதிய அனல் மின்நிலையம் வர்த்தக ரீதியாக இயங்க அனுமதி பெற்றதன் மூலம் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் அனல்மின் உற்பத்தி அளவானது அதன் துணை நிறுவனங்களையும் சேர்த்து மொத்தம் 4,640 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த மின்சக்தி நிலையங்களையும் சேர்த்து மொத்த மின் உற்பத்தி அளவு 6,061 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சூரிய ஒளி மின் உற்பத்தி கடந்த ஆண்டை விட 61.60 சதவீதம் வளர்ச்சி பெற்று என்.எல்.சி இந்தியா நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் 144 கோடியே 53 லட்சத்து 90 ஆயிரம் யூனிட் சூரிய ஒளி மின்சக்தியை உற்பத்தி செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே கால அளவை ஒப்பிடுகையில் 60.60 சதவீத வளர்ச்சியாகும். நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் என்.எல்.சி மின்நிலையங்களில் 1,374 கோடியே 27 லட்சத்து 40 ஆயிரம் யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நெய்வேலி புதிய அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட முதல் மின் உற்பத்தி பிரிவில் சில மாதங்களும், 709 மெகாவாட் திறன் கொண்ட சூரியஒளி மின் நிலையங்களில் 9 மாதங்களும் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 6,110 கோடியே 99 லட்சம் ரூபாய் மொத்த வருவாய் வருவாயும், நிகர லாபமாக 386 கோடியே 99 லட்சம் ரூபாயும் என்.எல்.சி இந்தியா நிறுவனம் ஈட்டியுள்ளது.