சேலத்தில், கொலை, கொள்ளை குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடியை குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் லைன்மேடு பகுதியைச் சேர்ந்த பாலசுந்தரம் மகன் ரஞ்சித்குமார் (25). கடந்த 2020ம் ஆண்டு, டிசம்பர் மாதம், முன்விரோதம் காரணமாக ரஞ்சித்குமார் கூட்டாளிகளுடன் சேர்ந்து கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ரவுடி செல்லத்துரையை கொலை செய்தார்.
இந்த வழக்கில் ரஞ்சித்குமார் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி, கூட்டாளிகள் கார்த்திகேயன், சதீஸ்குமார், ஹரிசங்கர், அப்துல் கரீம் ஆகியோர் தாதகாப்பட்டியில் உள்ள ஒரு காபி கடையில் புகுந்து, அங்கு டீ மாஸ்டரிடம் கத்தி முனையில் 5000 ரூபாய் பணம் பறித்துள்ளார். அவரிடம் இருந்த 2 பவுன் நகைகளையும் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த அன்றைய தினமே ரஞ்சித்குமாரும், கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் செயல்பட்டு வரும் ரஞ்சித்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அன்னதானபட்டி காவல் ஆய்வாளர், துணை ஆணையர் லாவண்யா ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
அதை ஏற்றுக்கொண்டு, காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டதன்பேரில், ரவுடி ரஞ்சித்குமாரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஞ்சித்குமாரிடம் கைது ஆணை வழங்கப்பட்டது.