
சேலத்தில், ஒரே இடத்தில் 16 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியைக் கடத்திச்சென்று மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல்துறை, சேலம் மாநகர அத்தியாவசியப் பண்டங்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக சீலநாயக்கன்பட்டி முல்லை நகரில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அந்தப் பகுதியில் இருந்த ஒரு ஒர்க்ஷாப்பிற்கு வெளியே சந்தேகத்திற்கு இடமான வகையில் பத்து மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை பிரித்துப் பார்த்தபோது 500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. தலா 50 கிலோ எடையளவில் பத்து மூட்டைகளில் அரிசியைப் பதுக்கி வைத்துள்ளனர்.
இதையடுத்து, அந்த ஒர்க்ஷாப்பின் உள்ளே சென்று ஆய்வு செய்தபோது, 310 மூட்டைகளில் 15,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்தனர்.
விசாரணையில், சேலம் கந்தம்பட்டி கிழக்கு காலனி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் பிரகாஷ்(28) என்பவர், ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. தாதகாப்பட்டியைச் சேர்ந்த கோபிநாத் என்பவருடன் சேர்ந்து கொண்டு, சேலம் டவுன், கந்தம்பட்டி, காசக்காரனூர், கொண்டலாம்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை கிலோ 2 ரூபாய்க்கு வாங்கி பதுக்கி வைத்ததும், அவற்றை நாமக்கல், கோவை பகுதிகளில் கோழிப்பண்ணைகளுக்கும், கேரளா மாநிலத்திலும் அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து பிரகாஷை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், கடந்த செப்.17- ஆம் தேதி, 2,500 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்திச்சென்றபோது, மல்லூர் பிரிவு சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையிடம் சிக்காமல் தப்பிச்சென்றுள்ளார். இவ்விரு வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட பிரகாஷ், சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.

ரேஷன் அரசி கடத்தல் மன்னன் பிரகாஷ், மீண்டும் மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டதாலும், ரேஷன் அரிசியைக் கடத்திச்சென்று கள்ளச்சந்தையில் விற்று வந்ததாலும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் ஆய்வாளர் கோபி மாநகர காவல்துறைக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், சேலம் மாநகர ஆணையர் செந்தில்குமார், ரேஷன் அரிசி கடத்தல்காரர் பிரகாஷை கள்ளச்சந்தைதாரர்கள் தடுப்புச்சட்டத்தின் (குண்டாஸ்) கீழ் கைது செய்ய செவ்வாய்க்கிழமை (அக்.20) உத்தரவிட்டார். மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரகாஷிடம் கைது ஆணை, அக்.21- ஆம் தேதி நேரில் சார்வு செய்யப்பட்டது.