தி.மு.க பொருளாளர் துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து நேற்று அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், ''பதவியை எதிர்பார்த்து தி.மு.க.விற்கு வரவில்லை. பொதுச்செயலாளர் பதவிக்கு தி.மு.க.வில் கலகம் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. பதவிகள் கிடைக்காவிட்டாலும் திமுகவின் அடிமட்ட தொண்டனாக இருந்து கோஷமிடுவேன். ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான்'' எனவும் தி.மு.க பொருளாளர் துரைமுருகன் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் "தி.மு.கவில் பொதுச்செயலாளர் பதவி கிடைக்காததால் துரைமுருகன் வருத்தத்தில் இருக்கிறார் என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமல்லாது, துரைமுருகன் அ.தி.மு.கவிற்கு வந்தால் அவரை சேர்த்துக் கொள்வோம் என அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், அவர் அ.தி.மு.க.விற்கு வந்தால் நிச்சயமாக நல்ல முடிவெடுக்கப்படும். அ.தி.மு.க. ஒரு ஆலமரம், அதிருப்தியில் உள்ள தி.மு.க.வினர் யார் வந்தாலும் நிழல் கொடுக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.