திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக தங்கம் கடத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்து தங்கத்தைக் கடத்தி வருபவர்கள், அவற்றை பலவிதமான யுக்திகளில் கடத்திவருகிறார்கள். ஆசனவாய் உள்ளிட்ட உடலின் பகுதிகளில் மறைத்துக் கடத்துவது, உடைமைகளில் மறைத்துக்கொண்டு வருவது எனக் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.
அதேபோல் நேற்று (08.10.2021) மாலை துபாய் சார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதிகாரிகள் சோதனை செய்ததில் ஒரு பயணி மூன்று உருண்டைகளாக 633.500 கிராம் தங்கம் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து, அவரிடமிருந்து தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதேபோல் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆசனவாய் பகுதியில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 555.00 கிராம் எடையுள்ள பேஸ்ட் வடிவிலான 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.