“கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் நிறுத்தம் என்பது தவறான தகவல்” என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வந்த நகைக்கடன் திடீரென நிறுத்தப்படுவதாக நேற்று வெளியான தகவல் விவசாயிகள் மத்தியில் பெரும் வேதனையை உண்டாக்கியிருக்கிறது. தமிழகத்தில் மூன்று அடுக்குகளாகச் செயல்பட்டுவருகின்றன கூட்டுறவு வங்கிகள். கரோனா காலத்தில், வருமானம் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் மக்களின் அவசர பணத்தேவைக்கு உதவிக்கரமாக இருந்தது கூட்டுறவு வங்கிகள்தான். கந்துவட்டிக் கொடுமையில் இருந்தும், தனியார் அடகு கடைகளின் அடாவடி வட்டியில் இருந்தும் சாமானிய மக்களை மீட்கும் நோக்கில் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டுவருகின்றன. அதிலும் குறிப்பாக கிராமபுற, நகர்புற மக்களுக்கு குறைந்த வட்டியில் நகைக்கடன் கொடுத்து வந்தன கூட்டுறவு வங்கிகள்.
இந்த நிலையில் நேற்று திடீரென, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கப்படமாட்டாது எனக் கூறப்பட்டது பலதரப்பட்ட மக்களையும் வேதனையில் தள்ளியிருக்கிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்துவந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,
“விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய நகைக்கடனைக் கொடுக்க வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை, அது தவறான செய்தி. சில வங்கிகளில் கடன் வழங்கல் அவற்றுக்கான ஒதுக்கீட்டைத் தாண்டி இருக்கும். அதையும் தாண்டி கூடுதலாக கடன் வழங்கப்பட்டிருந்தால் நிறுத்தி இருப்பார்கள். தேவையின் அடிப்படையில் விவசாயக் கடன், விவசாய நகைக்கடன் வழங்கப்படுகிறது. இதுகுறித்து எந்த அச்சமும் தேவையில்லை," என்றார். இதில் எது உண்மை? என்பதை உடனே அரசு அறிவிக்க வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.