திருச்சி மாவட்டம், கே.கே. நகர், அய்யப்பன் நகர், லூர்துசாமி பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் தேவி (45). இவர் தஞ்சை பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் வெளிநாட்டில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் கோவை மருத்துவக் கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோவையில் உள்ள மகளைப் பார்ப்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு தேவி சென்றார். அதன்பிறகு நேற்று மாலை வீடு திரும்பியபோது, வீட்டில் உள்ள பின்புற கதவு உடைக்கப்பட்டுத் திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபொழுது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 பவுன் தங்க நகைகள் மற்றும் 10 சவரன் வைர நகை உள்ளிட்டவை காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக கே.கே. நகர் போலீசிடம் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.