இந்தியாவில் கம்யூனிஸ்ட் ஆளும் ஒரே மாநிலம் கேரளா. மாநில தேர்தலை சந்திக்க இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா? என்ற கேள்வி கம்யூனிஸ்ட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. கடந்த முறை ஆட்சி செய்த காங்கிரசுக்கு கடைசி நேரத்தில் சோலார் பேனல் மோசடி சரிதா நாயரால் காங்கிரஸ், ஆட்சியை இழந்தது. அதேபோல் தற்போது கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு கடைசி நேரத்தில் தங்க கடத்தல் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் கொடியேறி பாலகிருஷ்ணனின் இளைய மகன் பினீஷ் கொடியேறி போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடா்பு இருப்பதாக அமலாக்க துறையால் கைது செய்யபட்டுள்ளார்.
ஏற்கனவே ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டிருந்த தங்க கடத்தலில் முக்கிய புள்ளியாக இருந்த முதல்வா் பினராயி விஜயனின் முதன்மை செயலாளா் சிவசங்கரன் அமலாக்க துறையால் கைது செய்யபட்டிருக்கும் நிலையில் எதிர்கட்சிகளான காங்கிரசும் பா.ஜ.க.வும் தங்கக் கடத்தலில் முதல் குற்றவாளி பினராயி விஜயன்தான் அவரையும் அமலாக்க துறை விசாரிக்க வேண்டும் என்று கேரளா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். மேலும் பினராயி விஜயனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். காங்கிரஸ் எதிர்கட்சி தலைவா் ரமேஷ் சென்னிதலா, பினராயி விஜயன் முதல்வா் பதவியை வேறொருவரிடம் கொடுத்துவிட்டு ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதை முன்வைத்துதான் காங்கிரஸ் போராட்டத்தை தொடா்கிறது என்றிருக்கிறார்.
பா.ஜ.க. மாநில தலைவா் சுரேந்திரன், முதல்வா் அலுவலகத்தை சோ்ந்த மேலும் இரண்டு அதிகாரிகள் இதில் தொடா்பு இருக்கிறது. இதனால் இதில் பினராயி விஜயனுக்கு தொடா்பு இல்லாமல் இல்லை எனக் கூறி பினராயி விஜயனுக்கு நெருக்கடியைக் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளா் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேறி, போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் முகம்மது அனூப்க்கு லட்ச கணக்கில் பணம் கொடுத்திருப்பதும் அந்த கும்பலோடு நெருங்கிய தொடா்பு இருக்கிறது என்று உறுதிபடுத்தப்பட்ட நிலையில் பினீஷ் கொடியேறியை அமலாக்க பிரிவு கைது செய்துள்ளது. இது கேரளாவில் ஏற்கனவே பற்றி எரியும் தங்கக் கடத்தல் நெருப்போடு இதுவும் கலந்து நெருப்பின் வேகத்தை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே கொடியேறி பாலகிருஷ்ணனின் மூத்த மகன் பினோய் கொடியேறி துபாயில் பணம் மோசடி செய்து அதில் கொடியேறி பாலகிருஷ்ணன் நேரடியாக தலையிட்டு பிரச்சனையை ஏற்படுத்திய சம்பவம் எதிர்க்கட்சிகள் பினராயி விஜயன் மீதும் குற்றச்சாட்டுகளை கூறியது. அதுவும் பினராயிக்கு தலைவலியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான் தற்போது தங்கக் கடத்தல் விவகாரமும் போதை பொருள் கடத்தல் விவகாரமும் பினராயி விஜயனுக்கும் ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஏற்கனவே சி.பி.ஐ. பதிவு செய்த பினராயி விஜயன் மீதான லாவ்லின் ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் தோ்தலில் எதிர்கட்சிகள் இதையெல்லாம் முன்னிலை நிறுத்த போவது உறுதி.