நாகை அருகே பாலக்குறிச்சி, ஓட்ட தட்டை உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்களைக் காப்பாற்ற முறை வைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்கள் பாலக்குறிச்சி, ஓட்டத்தட்டை, சோழவித்தியாபுரம், பெரியதம்பூர், சின்னதம்பூர், வேப்பஞ்சேரி, தண்ணிலப்பாடி . அந்த கிராமங்களுக்கு வெட்டாறு மூலம் வந்த தண்ணீரை நம்பி சம்பா பணியை தொடங்கினர் விவசாயிகள். பயிர் வளர்ந்து 20 நாட்கள் ஆனநிலையில் தண்ணீரின்றி 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் கருகிவிட்டன, அந்தபயிரைக் காப்பாற்ற தண்ணீர் திறக்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாலக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். தொடர்ந்து முறை வைக்காமல் தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
கடைமடை பகுதிகளுக்கு காவிரி தண்ணீர் கிடைக்க அரசு முறையான நடவடிக்கை எடுக்க தவறியதால் தினசரி போராட்டங்கள் நடந்தபடியே இருக்கின்றன.