சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரி (63) என்பவர் (03.05.2023) இரயிலுக்காக வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலையத்தில் நடை மேடை எண் ஒன்றில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் கைக் குழந்தையுடன் வந்த பெண்மணி ஒருவர், தனது 6 மாத பெண் குழந்தையைக் கொடுத்துவிட்டு சிறிது நேரம் பார்த்துக் கொள்ளும்படியும், ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவதாகவும் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் குழந்தையைக் கொடுத்த பெண் வராததால் பதற்றம் அடைந்த சுந்தரி காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள இரும்புப் பாதை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அதில் ஆறு மாத பெண் குழந்தையை மூதாட்டி சுந்தரியிடம் ஒப்படைத்துச் செல்லும் பெண்மணி வெளியில் காத்துக் கொண்டிருந்த தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு வேக வேகமாக ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளார். இந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து காட்பாடி இரும்புப் பாதை காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தையை விட்டுச் சென்ற பெண்மணி மற்றும் அவரது கணவர் ஏறிச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைக்கு ஆறு மாத குழந்தையை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைத்துள்ளனர். வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் கடந்த 3 ஆம் தேதி 3 மாத பெண் கைக்குழந்தையைப் பெற்ற தாயே அனாதையாக விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தையை விட்டுச் சென்றவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். குழந்தையை விட்டுச் சென்ற, திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த குழந்தையின் பெற்றோர் விஜய் மற்றும் கலைச்செல்வியை 24 மணி நேரத்தில் வேலூர் காட்பாடி ரயில்வே காவல் நிலைய போலீசார் கண்டுபிடித்தனர்.
பெற்றோரை வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார், விஜய் மற்றும் கலைச்செல்விக்கு அறிவுரை கூறினர். குழந்தைக்கு சென்னை ரயில்வே எஸ்.பி பொன்ராமு தங்கமகள் எனப் பெயர் சூட்டினார். பின்னர் குழந்தையை வேலூர் குழந்தைகள் நலக் குழுமத்தில் போலீசார் ஒப்படைத்த நிலையில், குழந்தையின் பெற்றோரான விஜய் மற்றும் கலைச்செல்வியிடம் குழந்தைகள் நல குழுமத்தினர் விசாரணை நடத்தி காப்பகத்தில் ஒப்படைக்கலாமா அல்லது பெற்றோருடன் அனுப்பலாமா என முடிவு செய்வார்கள் என இன்ஸ்பெக்டர் சித்ரா தெரிவித்துள்ளார்.