உத்தரப் பிரதேச மாநிலத்தில் 30 ரூபாய் பணம் பரிவர்த்தனையின் போது மூன்று பேர் இடையே தகராறு ஏற்பட்டதில் 17 வயது மாணவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பட் மாவட்டம், கே.எச்.ஆர். இன்டெர் கல்லூரியில் ஹிர்த்திக் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். இவர் சமீபத்தில் தனது கிராமத்தில் உள்ள மூன்று நபர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதில், 30 ரூபாய்க்காக இந்த சம்பவம் நடந்ததாகப் பல ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இது தொடர்பாக ஹிர்த்திக் குடும்பத்தினர், பராவுத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், இதே கிராமத்தைச் சேர்ந்த மூவருடன் ஹிர்த்திக், 30 ரூபாய் பணம் பரிமாற்றத்தில் ஏதோ தகராறு ஏற்பட்டதும். ஒரு கட்டத்தில் அது முற்றிப் போக ஹிர்த்திக்கின் கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்” எனக் கூறியுள்ளனர். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை விசாரித்த பராவுத் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபிசர் தேவேஷ் குமார் சிங்க் கூறுகையில், இந்த விவகாரத்தில் ஈடுபட்ட மூவரும் ஏற்கனவே ஹிர்த்திக்கிற்கு தெரிந்தவர்கள் தான் என்றும், ஹிர்த்திக்கின் உடலில் காயம் ஏற்பட்ட தழும்புகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிக்கை வந்த பிறகு அதற்கேற்றவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.