Skip to main content

முக்கிய சாலைக்கு வந்த ராட்சத முதலை! உயிர்த் தப்பிய பொதுமக்கள்! 

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

Giant crocodile on the main road

 

கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை பாலத்தில், நடந்து செல்லும் வழியில் ராட்சத முதலை புகுந்ததால் பரபரப்பானது. அப்பகுதி மக்கள் முதலையை உயிருடன் பிடித்து கொள்ளிடம் ஆற்றில் விட்டுள்ளனர்.

 

கும்பகோணம் - சென்னை சாலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இருக்கிறது கீழனை என்று அழைக்ககூடிய அனைக்கரை தடுப்பணை. 185 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்கது இந்த அணை. அப்போது ஆங்கிலேயர்கள், நடைபாதை, சீப், சாரட் வண்டிகள் சென்று வர இந்த வழியை அணையில் அமைத்திருந்தனர். காலப்போக்கில் பொது போக்குவரத்து சாலையாகவும், சென்னை கும்பகோணம் மார்க்கத்தின் முக்கிய சாலையாகவும் இருந்துவருகிறது. அதிகனரக வாகனங்களை இரவு நேரங்களில் விடுவது மற்றும் மணல் குவாரிகள் அமைத்தன் விளைவாக இந்த அணை இன்று ஆபத்தில் நிற்கிறது. 

 

இதுஒருபுறம் இருக்க கொள்ளிடம் ஆறு அணைக்கரையை நடு தீவாக ஒதுக்கி இரண்டு ஆறுகளாக பிரிந்து அணைக்கரையை தாண்டி மீண்டும் ஒன்றாக இணைந்து கடலுக்கு செல்லும். தீவுபோல் காட்சியளிக்கும் அணைக்கரை பொதுப்பணித்துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

 

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் சுமார் 50க்கும் மேற்பட்ட முதலைகள் இருக்கிறது. ஆண்டு தோறும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது, கொள்ளிடம் ஆற்றின் வழியாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி பாசன வாய்க்கால்கள், ஆறுகள் வழியாக இளநாங்கூர், சிவாயம், செட்டிமேடு, நாஞ்சலுார், பழைய கொள்ளிடம், வடக்கு ராஜன் பாசன வாய்க்கால், மேலப்பருத்திக்குடி, பெராம்பட்டு, கூத்தன் கோவில், வேளக்குடி, அகரநல்லுார், வல்லம்படுகை, கடவாச்சேரி, ஜெயங்கொண்டபட்டினம், பிச்சாவரம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர கிராம நீர்நிலைகளில் சென்று தங்கி விடுகின்றன. அந்த பகுதியில் ஆற்றில் இறங்கும் பொது மக்கள், கால்நடைகளை கடித்து இழுத்துச் சென்றுவிடுகின்றன. கால்நடைகளின் உயிரிழப்பே அதிகமாக இருந்துவருகிறது.


அதே நேரம் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்படும் போதும், புதர்களில் இருந்த முதலைகள் வெளியேறி மீண்டும் ஊருக்குள் வந்து விடுகின்றன. அப்படித்தான் 12ம் தேதி இரவு அணைக்கரை பாலத்தில் பாதசாரிகள் நடந்து செல்லும் வழியில் முதலை ஊர்ந்து வந்திருக்கிறது. அதனை கண்டு நடுங்கிய பாதைசாரிகள் அதிகாரிகளுக்கு தகவல் கூறினர். அதிகாரிகளோடு அங்கிருந்த  மக்கள் முதலையை உயிருடன் பிடித்து கொள்ளிடம் ஆற்றில் மீண்டும் விட்டனர். 


இரவு நேரம் என்பதால் பாதசாரிகள் அவ்வழியாக யாரும் நடந்து செல்லவில்லை. அதனால் உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்