தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தம் நள்ளிரவில் இருந்து தொடங்கி உள்ளது. இருப்பினும் சென்னையில் வழக்கம்போல் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போன்று தமிழகத்தின் விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் இருந்தும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் சில இடங்களில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் திமுக தொழிற்சங்க தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சில இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்துகள் நிரம்பி வழியும் சூழல் ஏற்பட்டது.
பல இடங்களில் தற்காலிக ஓட்டுநர்களை பயன்படுத்தி பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் தற்காலிக பேருந்து ஓட்டுநர் தன்னால் பேருந்தை இயக்க முடியவில்லை என பாதி வழியில் நிறுத்திவிட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் செல்லும் 16E என்ற பேருந்து பணிமனையில் இருந்து தற்காலிக ஓட்டுநர் ஒருவரால் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், குறிப்பிட்டு தூரத்திலேயே பேருந்து நிறுத்தப்பட்டது. இது குறித்து அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று தற்காலிக ஓட்டுநரிடம் கேட்டதற்கு தான் மினி டெம்போ ஓட்டி வந்ததாகவும், தன்னால் பேருந்தை ஓட்ட முடியவில்லை. வளைவில் செல்லும் போது கியர் மாற்ற தெரியவில்லை என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் வேறு நபரை வைத்து பேருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.