சேலத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் கோபிநாத் என்பவரின் தாயார் ராஜலக்ஷ்மி சமைப்பதற்காக எரிவாயு சிலிண்டரை பற்ற வைத்த பொழுது எதிர்பாராதவிதமாக கேஸ் சிலிண்டர் வெடித்தது. ஏற்கனவே கேஸ் கசிவு இருந்ததை அறியாமல் அடுப்பைப் பற்றவைத்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பயங்கர சத்தத்துடன் ஏற்பட்ட இந்த விபத்தில் அருகிலிருந்த வீடு, மாடியிலிருந்த வீடு என மொத்தம் 4 வீடுகள் தரைமட்டமானது. சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். மொத்தம் 11 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மூதாட்டி ராஜலக்ஷ்மி உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தீயணைப்புத்துறையில் பணியாற்றி வரும் பத்மநாபன், அவரது மனைவி தேவி, கார்த்திக்ராம் ஆகியோரை தீவிரமாகத் தேடிவந்த நிலையில் பல மணி நேர தேடுதலுக்குப் பின் சடலமாக மூவரும் மீட்கப்பட்டனர். அதேபோல் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மற்றொரு மூதாட்டி எல்லையம்மாள் என்பவரின் உடலும் கைப்பற்றப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையில் பணியாற்றி வந்தவர் வீட்டிலேயே நிகழ்ந்த இந்த கேஸ் சிலிண்டர் வெடி விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் வெடித்த கேஸ் சிலிண்டர் வணிக கேஸ் சிலிண்டர் என்பதால் விபத்து சேதம் அதிகமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.