கோப்புப்படம்
திருவள்ளூரில் கஞ்சா போதையில் அரிவாளால் தாக்கியதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இதில் மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ளது ராமச்சந்திராபுரம். சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு குடியமர்த்தப்பட்டு இருந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் கொத்தனார் வேலை செய்து வரும் ஹரி என்ற இளைஞர் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு இருந்த ஐந்து பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல் மிரட்டி செல்போனை பிடுங்கி கொண்டதாக கூறப்படுகிறது.
இதை தட்டிகேட்பதற்காக ஹரி முயன்ற பொழுது அரிவாளால் வெட்டியுள்ளனர். தகவலறிந்து ஹரியின் உறவினர்களும் அங்கு சென்றனர். அப்போது கஞ்சா போதையில் இருந்த அந்த கும்பல் ரவி, வெங்கடேசன், கஸ்தூரி அய்யா, பாலாஜி, வெங்கடேசன் என ஐந்து பேரையும் சரமாரியாக அரிவாளால் தாக்கினர். இதில் கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டு விழுந்தது. மீட்கப்பட்ட ஆறு பேரும் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வெட்டுப்பட்ட ஆறு பேரில் மூன்று பேர் பலத்த காயத்தோடு தீவிர சிகிச்சையில் உள்ளனர். கஞ்சா பாதை கும்பலால் ஆறு பேர் வெட்டப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.