போதைப் பொருளான கஞ்சா விற்பனையைத் தடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறது தமிழ்நாடு காவல்துறை. ஆனாலும், தவறான வழியில் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு கஞ்சாவைப் புழக்கத்தில்விடும் பேர்வழிகள், இளைய சமுதாயத்தை கஞ்சா போதைக்கு அடிமையாக்குவதில் காவல்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளனர்.
சிவகாசியைச் சேர்ந்த சங்கிலியின் மகன் (பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது) ஸ்ரீவில்லிபுத்தூர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 12ஆம் படித்து முடித்திருக்கிறான். கடந்த 10-ஆம் தேதி இரவு முழுவதும் அவன் வீட்டுக்கு வரவில்லை. 11ஆம் தேதி காலை ஒரு மாதிரியான நிலையில் அவன் வீட்டுக்கு வந்தபோது, “ராத்திரி முழுக்க எங்கே போயிருந்த?” என்று விசாரித்த சங்கிலி, மகனுடைய பேன்ட் பாக்கெட்டை சோதனை செய்த்தபோது , சின்னதாக ஒரு கஞ்சா பொட்டலம் இருந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து அவன் “நண்பர்கள் ராஜரத்தினம், ராஜபாண்டியோடு நானும் சேர்ந்து சிவகாசி நாரணாபுரம் ரோடு போஸ் காலனி, முனீஸ்வரன் காலனியைச் சேர்ந்த கார்த்தீஸ்வரனிடமும் மதனிடமும் அடிக்கடி கஞ்சா வாங்கி புகைப்போம். அந்தப் பழக்கத்தில் கஞ்சா வாங்கி விற்று ராஜபாண்டி மூலம் அவர்களுக்கு பணம் கொடுப்போம். இந்த வேலையைச் செய்ததற்கு எனக்கு பணமும் கொஞ்சம் கஞ்சாவும் கொடுத்தார்கள். அந்த கஞ்சாவை குடித்துவிட்டு, ராத்திரி முழுவதும் சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் பக்கம் இருந்தேன்.” என்று தந்தை சங்கிலியிடம் நடந்ததைச் சொல்லியிருக்கிறான்.
மறுநாள் 12 ஆம் தேதியும் இரவு வீட்டுக்கு வராமல் அதிகாலை 3 மணிக்கு அதே நிலையில் மகன் வர, சங்கிலி சோதனை செய்தபொழுது 15 சின்ன கஞ்சா பொட்டலங்கள் இருந்திருக்கின்றன. அதன்பிறகு 13-ஆம் தேதி சிவகாசி டவுண் காவல் நிலையத்தில் சங்கிலி புகார் கொடுத்திருக்கிறார். சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்ட பிரிவு மற்றும் போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டப் பிரிவுகளின் கீழ் மதன் மற்றும் கார்த்தீஸ்வரன் மீது வழக்கு பதிவாகியுள்ளது.