Skip to main content

பணத்திற்காக நண்பனை கடத்திய கும்பல்.. தீவிர தேடலில் காவல்துறையினர்.. 

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

The gang who kidnapped a friend for money .. Police in intensive search ..

 

விழுப்புரம் மாவட்டம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியில் உள்ள சிங்கப்பூர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர், அப்பகுதியில்  வட்டிக்கு விடும் தொழில் செய்துவருகிறார். இதன் காரணமாக அவரிடம் பணப்புழக்கம் அதிகமாக இருந்துள்ளது. 

 

கிருஷ்ணவேணியின் மகன் சூரியகுமார். இவர் தனது நண்பர்களான சூர்யா, நந்தா, பெரிய பாலா, மாரி, முரளி ஆகியோருடன் அடிக்கடி டீ குடிக்க செல்வதுண்டு. இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் சூரியகுமாரை டீ குடிப்பதற்காக மேற்படி நண்பர்கள் வழக்கம்போல் அழைத்துள்ளனர். சூரியகுமாரும் அவர்களுடன் டீ குடிக்கச் சென்றுள்ளார். 


ஜானகி புறம் தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்ததும் சூரியகுமாரை ஒரு காரில் கட்டாயமாக திணித்துக் கொண்டு கரடிபாகம் என்ற பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சூரியகுமாரை சுற்றி உட்கார்ந்த ஐந்து நண்பர்களும், சூரிய குமாரிடம் உனது தாய் கிருஷ்ணவேணியிடம் 10 லட்சம் பணம் கேட்டு கொண்டு வரும்படி கூறுமாறு மிரட்டியுள்ளனர். மேலும், சூரியகுமாரை அடித்து மிரட்டி தாயிடம் பணம் கேட்குமாறு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். உயிருக்கு பயந்து போன சூர்யகுமார், தனது தாய் கிருஷ்ணவேணிக்கு போன் செய்து தான் கடத்தப்பட்டுள்ளதாகவும், மீட்க பணம் தரும்படியும் கேட்டுள்ளார். 


மகனின் நிலையை கேட்டு பதறிப்போன கிருஷ்ணவேணி, மாவட்ட காவல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இதுதொடர்பாக தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக தாலுகா காவல்துறையிடம் நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து தாலுக்கா காவல்துறையினர் ஆலோசனையின்படி 10 லட்சம் பணத்தை தயார் செய்தார் கிருஷ்ணவேணி. பணம் தயாராக இருப்பதாக மகனுக்கு செல்போனில் தகவல் அளித்தார். அப்போது கிருஷ்ண வேணியிடம் பேசிய கடத்தல் கும்பல், விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள எல்லீஸ் சத்திரம் பகுதிக்கு தனியாக நள்ளிரவு நேரத்தில் பத்து லட்சம் பணத்துடன் வரவேண்டும் காவல்துறை உதவியை நாடினால் மகன் உயிருக்கு ஆபத்து என்றும் மிரட்டியுள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து அவர்கள் கூறியபடி 10 லட்சம் பணத்துடனும், போலீசாரின் அறிவுரைப்படியும் மர்ம நபர்கள் கூறிய எல்லிஸ் சத்திரம் பகுதிக்கு கிருஷ்ணவேணி நள்ளிரவு நேரத்தில் சென்றுள்ளார். போலீசாரும் கிருஷ்ணவேணியை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் இருந்து சூரியகுமாரை கீழே இறக்கினர். அப்போது போலீசார் கிருஷ்ணவேணியுடன்  இருப்பதை கண்டதும், அந்த கும்பல் தப்பி சூரியகுமாரை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டது. 

 

மர்ம கும்பலால் தாக்குதலுக்கு ஆளான சூரியகுமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்துள்ளனர். சூரியகுமார் அளித்த புகாரின் பேரில் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பல் மீது வழக்குப் பதிவு செய்ததோடு விழுப்புரம் டி.எஸ்.பி சிலம்பரசன், தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு ஆள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த அனைவரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்