Skip to main content

தம்பியின் இறுதிச் சடங்கு; அக்காவை வெட்டிக் கொன்ற கும்பல் - பரபரப்பான தலைநகரம்

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
gang incident the sister who had come to her brother's funeral in Chennai

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். 26 வயதான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட சில குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது மனைவி நந்தினி. இந்த தம்பதி தற்போது டி.பி.சத்திரம் பகுதியில் வசித்து வந்தனர். ஆரம்பத்தில் சிறு சிறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சதீஷ், காலப்போக்கில் முழுநேர ரவுடியிசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன் நீட்சியாக, கடந்த 2020 நவம்பர் மாதத்தில் அம்பத்தூர் அத்திப்பட்டு ஐ.சி.எப் காலனியைச் சேர்ந்த போண்டா பாலாஜி என்பவரை சதீஷ் கொலை செய்திருக்கிறார்.

இதனிடையே, புறநகர் பகுதிகளில் முக்கிய ரவுடியாக வலம் வரத் தொடங்கிய சதீஷ், போண்டா பாலாஜி வழக்கில் சிறைக்கு சென்று பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஊருக்குள் பகையை வளர்த்துக்கொண்ட சதீஷுக்கு ஏகப்பட்ட எதிரிகள் இருக்கிறார்கள் எனச் சொல்லப்படுகிறது. அதே சமயம், போண்டா பாலாஜியின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்பதற்காக அவரது கூட்டாளிகள் சதீஷையும் அவரது மனைவி நந்தினியையும் கொலை செய்வதற்காக திட்டம் தீட்டி வந்தனர். ஆனால், அவர்கள் போட்ட திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. போண்டா பாலாஜி ஆட்களிடம் சிக்காமல் சதீஷ் - நந்தினி தம்பதி அதிக எச்சரிக்கையுடனே இருந்து வந்தனர்.

இத்தகைய சூழலில், கடந்த 17 ஆம் தேதியன்று நந்தினியின் தம்பியான மதன் என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அப்போது, இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நந்தினி தனது தம்பியை பார்க்க வேண்டும் எனக் கண்ணீர் விட்டுக் கதறினார். இந்நிலையில்,  நந்தனி தனது தம்பியின் உடலைப் பார்ப்பதற்காக அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திப்பட்டு ஐ.சி.எப் காலனி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் குடியிருப்புக்கு வந்துள்ளார். அப்போது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட போண்டா பாலாஜியின் கூட்டாளிகள் கண்டிப்பாக மதனின் இறுதிச் சடங்கிற்கு நந்தினியும் சதீஷும் வருவார்கள் என்றும், அந்த நேரத்தில் அவர்களை கொலை செய்துவிடலாம் என அந்த தம்பதிக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளனர். 

இதற்கிடையில், இந்த தகவலை தெரிந்துகொண்ட போலீசார் நந்தினியை பலமுறை எச்சரித்துள்ளனர். ஆனால், தனது தம்பியை நல்லடக்கம் செய்த பின்பு செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து, நந்தினி தனது தோழியான காவியா என்பவருடன் உயிரிழந்த தம்பியின் உடலைப் பார்ப்பதற்காக தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அனைத்து சடங்குகளும் முடிந்த பிறகு உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். அப்போது, யாரும் எதிர்பாராத சமயத்தில் திடீரென அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் நந்தினியை சுற்றி வளைத்தனர்.

ஒரு கணம் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நந்தினி, என்ன செய்வது எனத் தெரியாமல் திகைப்படைந்த சமயத்தில் அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் நந்தினியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த நந்தினி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதன்பிறகு, அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றது. 

இந்நிலையில், இதுதொடர்பாக தகவலறிந்த அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் தலைமையிலான போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து, கொலை செய்யப்பட்ட நந்தினியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, அவரது உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். 

இதனிடையே, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காவல் ஆய்வாளர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், போண்டா பாலாஜியின் சகோதரர்கள் ஆறுமுகம், சீனு உட்பட 7 பேர் கொண்ட கும்பல் நந்தினியை கொலை செய்தது தெரிய வந்தது. 

இதையடுத்து, போலீசாரின் தேடுதல் வேட்டையில் ஆறுமுகம், சீனு, லிடியா, சூர்யா, ராஜி உள்ளிட்ட 5 பேரை மடக்கிப் பிடித்த தனிப்படை போலீசார், அவர்களைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தலைமறைவாக உள்ள 2 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்போது, 2020ல் நடந்த கொலை சம்பவத்திற்குப் பழிக்கு பழி வாங்குவதற்காக இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்