வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கருடன்’. இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
ட்ரைலர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொள்ள அதில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உல்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேடையில் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “நான் ஆத்மார்த்தமாக அண்ணன் எனக் கூப்பிடுவது சூரி அண்ணனைத்தான். அது சினிமாவைத் தாண்டிய உறவு. அவருக்கு முதன் முதலில் கதையின் நாயகனாக நடிக்கலாம் எனச் சொல்லி கதை சொன்னது நான்தான். இப்போது பெரிய பெரிய டைரக்டர்ஸ் கூட வேலை பார்க்கிறார். சீமராஜா படத்தின் போது நீங்க லீட் ரோலில் நடிக்கலாம் எனச் சொன்னபோது அவர் மறுத்துவிட்டார். பின்பு ஒரு நாள், வெற்றிமாறன் சார் டைரக்ஷனில் நடிப்பதாக சொன்னார். கண்டிப்பாக அது அவருக்கு திருப்புமுனை படமாக இருக்குமென சொன்னேன். சூரி அண்ணனுடைய திறமை பத்தி எனக்கு நிறைய தெரியும். அவர் கூட நிறைய படம் வேலை பார்த்ததால் நிறைய நேரம் அவருடன் செலவழித்துள்ளேன். காமெடி பண்ற ஒருத்தர் நிச்சயமாக சீரியஸா, எமோஷ்னலா நடிக்க முடியும், ஆனால் ரொம்ப சீரியஸா நடிக்ககூடியவர் காமெடி பண்ண முடியாது. அதனால் காமெடியாக நடிப்பவர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். அதுக்கு ஒரு எடுத்துக்காட்டு சூரி அண்ணன்.
அவரை வைத்து கொட்டுக்காளி என்ற ஒரு படம் தயாரித்திருக்கிறேன். சூரி அன்ணனுக்கு விடுதலையில் வெற்றி சார், ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறார். அதை விட ஒருபடி மேலாக கொட்டுக்காளி இருக்கும் என நம்புறேன். அதில் புது சூரியை பார்ப்பீங்க” என்றார்.