கஜா புயல் பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணத்திற்கு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கடந்த 26ஆம் தேதி சென்றார். அங்கு நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரியை சந்தித்து, தான் ஒரு லாரி முழுக்க கொண்டு வந்த பொருள்களை நாகை மாவட்டமெங்கும் வினியோகிக்குமாறு கூறினார்.
சரத்குமாரிடம் இருந்து பெறப்பட்ட பொருள்கள் மாவட்ட அரசு நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
முன்னதாக நாகை தொகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சரத்குமாரை அழைத்துச் சென்று காட்டினார் தமிமுன் அன்சாரி. மேலும் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்க வைத்தார். நம்பியார் நகர் பகுதிக்கு சரத்குமாரை அழைத்துச் சென்று, அங்கு ரூ.36 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க முயற்சி நடைபெறுவதாகவும், அதில் ஒரு பங்கை இப்பகுதி மக்கள் தருவதாகவும் தமிமுன் அன்சாரி கூறினார். அப்போது நம்பியார் நகர் மீனவ மக்களிடம் பேசிய சரத்குமார், தானும் 50 லட்சம் ரூபாய் நன்கொடையாகத் தருவதாகவும், அதை 6 மாதத்துக்குள், நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரியிடம் ஒப்படைப்பதாகவும் உறுதி அளித்தார்.