கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு இன்று (22.07.2024) காலை நிலவரப்படி வினாடிக்கு 74 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஒகேனக்கலுக்கு நேற்று (21.07.2024) மாலை வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 74 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதிகப்படியான நீர்வரத்து காரணங்களால் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் 7வது நாளாக இன்றும் பரிசல்கள் இயக்கவும், குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு மாவட்ட நிர்வாகம் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று மதியம் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.