சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு தனிமை வார்டுகள் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 31 பேர் தனிமை வார்டுகளில் உள்ளனர். இவர்கள் தவிர 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கும் தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இம்மருத்துவமனையின் வளாகத்தில் காவல்நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள காவல்துறையினர் சுழற்சி முறையில் தனிமை வார்டுகளை கண்காணித்து வருகின்றனர்.
அதனால் அவர்களுக்கும் நோய்த்தொற்று அபாயம் இருப்பதால், அதிலிருந்து காத்துக்கொள்ள காவல்துறையினருக்கு முககவசம், உடல் முழுவதும் மறைக்கும்படியான முழுநீள கவச உடை ஆகியவை மாநகர காவல்துறையால் வழங்கப்பட்டு உள்ளன. கையுறைகள், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள சானிட்டைஸர் திரவமும் வழங்கப்பட்டு உள்ளன.
கரோனா தனிமை வார்டுகளை மூன்று ஷிப்டுகளில் முப்பது காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அவர்களுக்கு முழுகவச உடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி காவல்துறை வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.