திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயில் முன்பு தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஆதரவு ஒன்றிய கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 11 ஆரம்பப் பள்ளிகளில் உள்ள சிதலமடைந்தக் கட்டடங்களை அகற்றும் பணியை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இது சம்பந்தமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்த தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் மற்றும் தி.மு.க. ஆதரவு ஒன்றிய கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அகற்றும் பணி நடைபெறுவது குறித்து கேட்டபோது, அதற்கு அவர் முறையாக பதில் அளிக்காமல் கவுன்சிலர்களை அவமரியாதை செய்ததாகக் கூறி கவுன்சிலர்கள் ரூபி சகிலா, சுதந்திர தேவி, கணேசன், ராஜதுரை, பாலமுருகன் உள்ளிட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் கருப்புத்துணி கட்டி தலையில் துண்டுடன் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கவுன்சிலர்கள் பேசும்போது, "பணி ஆணை வழங்கப்படாமல் பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அங்குள்ள இரும்பு பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும், இது குறித்து கேட்க வந்த இடத்தில் தங்களை வட்டார வளர்ச்சி அலுவலரும், ஒன்றியப் பொறியாளரும் அவமரியாதையைச் செய்ததாகவும், இதனை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை தங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை" என்றனர்.
ஒன்றிய கவுன்சிலர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, காவல்துறையினரும், அதிகாரிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.