திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மக்கள் உரிமை இயக்கம் என்ற பெயரில் ஒரு அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில், அரசு வேலை வாங்கி தருவதாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அரசு பணியான வட்டாட்சியர் பணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பணி, மின்வாரிய உதவி பொறியாளர் பணி, அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் பணி மற்றும் கணினி இயக்குவதற்கான வேலைகளுக்காக இன்று நேர்முக தேர்வு நடைபெறுவதாக தெரிவித்து இருந்ததை அடுத்து திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 8 பேர் காலை நேர்முகதேர்வுக்கு வந்தனர். நேர்முகதேர்வு நடத்த சென்னையில் இருந்து அலுவலர்கள் வருவதாக தெரிவித்து சிலரை காண்பித்துள்ளனர்.
ரகசிய தகவலின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் தலைமையில் போலீசாரும், வட்டாட்சியர் பத்மநாபன் தலைமையில் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். விசாரணையில் 8 பேருக்கு வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.11.50 லட்சம் ரூபாய் பெற்றுள்ளதாகவும், மக்கள் உரிமை இயக்கம் என்ற பெயரில் போலி பதிவு எண் கொண்டு அலுவலகம் நடத்தி வந்ததாகவும், மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் பணம் பெற்றுள்ளதாக விசாரணையில் நிறுவன தலைவர் லிவிங்ஸ்டன் வாக்குமூலம் அளித்தார்.
அப்போது அலுவலகத்தில் சோதனை செய்தபோது ரூ.50,000 ரொக்கம் இருந்ததை கைப்பற்றினர் மற்றும் கணினியை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து அரசு முத்திரை பயன்படுத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ள மக்கள் உரிமை இயக்கம் அலுவலகத்திற்கு ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபன் தலைமையிலான வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த மக்கள் இயக்கம் நிறுவனத்தலைவர் லிவிங்ஸ்டன் மற்றும் சுதாகர் ஆகிய இருவர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுவது, இவர்கள் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற மோசடி செய்துள்ளதாகவும், அரசு அதிகாரிகளை சந்தித்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை அலுவலகத்தில் வைத்து பலரிடம் காண்பித்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த தகவல்கள் வெளியானதுடன் பல்வேறு பகுதிகளிலிருந்து புகார்கள் வர தொடங்கியது. இதுவரையில் 38 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்து உள்ளதாகவும், மேலும் இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளதாகவும், ஆனால் அவருடைய காரில் வழக்கறிஞர் என்று ஒட்டி கொண்டு சுற்றித்திரிந்த வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அவர் பயன்படுத்தும் கர்நாடகா பதிவு எண் கொண்ட கார் போலி பதிவு எண் என்பது தெரிய வந்துள்ளது என்கிறார்கள்.