அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால் லைன் மேனாக வேலை பார்த்தவரை தாக்கியதில் லைன் மேன் தலையில் 7 தையல் போடப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகரை சேர்ந்தவர் குப்பன். மணவாள நகர் பகுதியில் லைன் மேனாக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக அந்த நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு வழக்கம் போல் மணவாள நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. அதனை சீரமைக்கும் பணியில் குப்பன் ஈடுபட்டிருந்தார். அப்போது ஐந்து நபர்கள் கொண்ட மர்ம கும்பல் தங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது அதை ஏன் சீர் செய்யவில்லை என குப்பனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள் அலுவலகத்தில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியதோடு இரும்பு கம்பியால் குப்பனை தலையில் தாக்கினர். இதனால் கீழே விழுந்த குப்பன் சக ஊழியர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு தலையில் 7 தையல்கள் போடப்பட்டது. அதனையடுத்து குப்பனுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் 'மின் ஊழியர்களுக்கு சரியான பாதுகாப்பினை வழங்க வேண்டும்' என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.