தடை செய்யப்பட்ட பின்னரும் ஃப்ரீ ஃபயர் விளையாட்டு தொடர்வது எப்படி? என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த ஐரின் அமுதா என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மகள் கல்லூரி முதலாமாண்டு பயின்று வரும் நிலையில், கடந்த செப்டம்பர் 6- ஆம் தேதி முதல் அவரை காணவில்லை. இது தொடர்பாக, விசாரித்த போது, தனது மகள் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஃபிரீ ஃபயர் விளையாட்டு விளையாடியதாகவும், அதில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக, கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒருவருடன் சென்றிருக்கலாம் அவரது நண்பர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, காணாமல் போன தனது மகளை மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் அமர்வில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டு தடை செய்யப்பட்ட நிலையில், இளம் தலைமுறையினர் அதனை விளையாடுவது எப்படி? காவல் துறையினரும், சைபர் கிரைமினரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஃப்ரீ ஃபயர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவர் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.