சாதாரண மனிதன் முதல் நாட்டின் அதிபர்கள் வரை அந்த சொல்லை கேட்டாலே ஒரு வித நடுக்கம் ஏற்படுகிறது என்றால் அது கரோனா வைரஸ் என்ற வார்த்தை தான். இன்றைய கணக்குப்படி இந்த வைரஸ் தொற்றிலிருந்து 200 பேருக்கு மேல் தமிழகத்தில் நலம் பெற்று உள்ளார்கள். 1200 பேருக்கு மேல் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் மட்டுமே இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த கணக்குகள் கரோனா வாந்தால் மரணம்தான் என்ற நிலை கிடையாது என்பதை உணர்த்துகிறது. ஆனாலும் ஒரு மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக உடலில் இல்லாமலிருந்தால், வழங்கப்படும் எந்த மருந்தும் பலனளிக்காமல் இறப்புதான் ஏற்படும் என்பதையும் ஒரு மருத்துவர் உயிரிழப்பு தெளிவுபடுத்துகிறது.
இது குறித்து பிரபலமான தனியார் மருத்துவமனையின் சீனியர் மருத்துவர் ஒருவர் நம்மிடம் பேசும்போது, "இந்த நோய் தொற்றுக்கு உலகில் இதுவரை மருந்து இல்லை. அதேபோல் இந்த நோய் தொற்று ஒரு மனிதனின் உடலுக்குள் எப்படியெல்லாம் உள்சென்று உயிரை காவு வாங்கும் என்கிற ஆராய்ச்சியில் இப்போது மருத்துவ உலகம் ஈடுபட்டுள்ளது. ஆனாலும் இந்தத் தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் சிகிச்சை பலன் ஏற்பட்டு அவர்கள் இதிலிருந்து விடுபட்டு நலம் பெறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மட்டும் அல்ல, அவர்களின் உடலில் உள்ள நோய் எதிர்பு சக்தியும்தான் காரணம். இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட நபரின் உடல்நிலையை பொறுத்தே அவர் பிழைப்பதும் இறப்பதும் நிகழ்கிறது.
குறிப்பாக "ஆந்திரா மாநிலம் நெல்லூரில் தமிழகத்தை சேர்ந்த ஒரு மருத்துவருக்கு இந்த கரோனா வைரஸ் உறுதியாகி, அவர் சென்னையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். அந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யக்கூட பல பிரச்சனைகள் ஏற்பட்டதையும் நாம் அறிவோம். அந்த மருத்துவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானவுடன் அந்த தனியார் மருத்துவமனையில் 40 லட்சம் பணம் செலுத்தி சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவரின் குடும்பத்தினருக்கும் இந்த வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து, அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆனாலும் அந்த மருத்துவருக்கு சிகிச்சை பலன் தராமல் போகப்போக மேலும் 30 லட்சம் அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொடுக்கப்பட்டது. இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான அந்த மருத்துவர் குடும்பம் செலவழித்தது 70 லட்சம். ஆனாலும் அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
அதற்கு காரணம் அந்த மருத்துவர் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை விரட்டும் நிலையில் இல்லை. இதுதான் முக்கிய காரணம். மேலும் செலவு இவ்வளவு ஆகிவிட்டதே என்பதல்ல, இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவருக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர்கள் குழு ஒரு நாளைக்கு மூன்று உடைகளை மாற்ற வேண்டும். ஒரு உடை சாதாரணமாக நான்காயிரம் ரூபாய். மூன்று மருத்துவர்கள், 4 செவிலியர்கள், 5 உதவியாளர்கள் என அந்த மருத்துவமனையில் ஒரு நாளைக்கு அவர்கள் இந்த வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க போடக்கூடும் பாதுகாப்பு உடை மட்டும் ஒரு லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. அதே போல் பல லட்சம் ரூபாய் இந்த வெண்டிலேட்டருக்கு செலவாகிறது.
ஒட்டுமொத்த மருத்துவமனையும் ஒரு நோயாளிக்காகவே இயங்க வேண்டியுள்ளது. ஆகவே தான் இது கொள்ளைநோய் மட்டுமல்ல பணத்தையும் ஏராளமாக கொட்ட வேண்டிய நோயாக இருக்கிறது. ஆனாலும் எவ்வளவு லட்சம் செலவழித்தாலும் இந்த நோயின் தீவிரத்தன்மை அந்த உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை சார்ந்தே அமைகிறது. மருத்துவ உலகம் எத்தனையோ அதிசயங்களையும், அபூர்வங்களையும் கண்டுபிடித்து வரும் இந்த காலத்தில், இந்த வைரஸ் எல்லாவற்றையும் மண்ணோடு மண்ணாக்கி தனது ஆளுமையை மனித சமூகத்தில் செலுத்தி வருவது மிகவும் வேதனையான ஒன்று தான்" என்றார்.