Skip to main content

விவசாயிகளின் பிணத்தின் மீது நடந்து சென்றுதான் தடை செய்ய முடியும்: கே.எஸ்.அழகிரி 

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

KSAlagiri


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்குத் திங்கள்கிழமை மாலை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி நேரில் சென்று ஆறுதல் கூறி ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினார்.
 

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாநில அரசு, இரு குடும்பத்திற்கும் இடையே கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட முன்விரோத பிரச்சினைகளைத் தீர்க்க காவல்துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தக் கொலை நடந்திருக்காது என்றார்.
 

இலவச மின்சாரம் தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், மத்திய அரசு, மின்சாரத்தை இலவசமாகத் தர முடியாது என்று கூறுகிறது. மாநில அரசு உடனடியாக இலவச மின்சாரத்தைத் தடை செய்ய வேண்டும் என்று மிக கடுமையான முடிவை எடுத்திருக்கிறது.
 


மத்திய அரசு, லாப நஷ்ட கணக்கு போட்டு அதை இலவசம் எனக்கருதி தடை செய்தால் விவசாய உற்பத்தி பொருட்களின் விலை குறைந்து போகும். உணவு தானிய உற்பத்தி குறைந்து போகும். மீண்டும் சோவியத் அமெரிக்க நாடுகளை நாடவேண்டி வரும். எனவே மோடி அரசும், தமிழக அரசும் இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது. அதையும் மீறி இலவச மின்சாரம் ரத்து என்ற முடிவை எடுத்தால் தமிழகத்தில் இருக்கிற விவசாயிகளின் பிணத்தின் மீது நடந்து சென்றுதான் தடை செய்ய முடியும். வேறு அதிகாரத்தால் முடியாது என்றார். 
 

இதற்கிடையில் 144 தடை உத்தரவை மீறியதாக கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினர் 10 பேர் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


 

சார்ந்த செய்திகள்