சென்னை காவேரி மருத்துவமனையில், இந்திய தொழிற் கூட்டமைப்பு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கூட்டாண்மை சமூகப் பங்களிப்பு நிதியின் மூலம் நடத்தும் கரோனா தடுப்பூசி செலுத்தும் சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28/07/2021) தொடங்கிவைத்தார்.
அதைத் தொடர்ந்து, இந்திய தொழிற் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் சந்திரகுமார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, இந்திய தொழிற் கூட்டமைப்பின் கூட்டாண்மை சமூகப் பங்களிப்பு நிதியில் இருந்து, இலவச கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிக்கு 2 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் என். எழிலன், த. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் / முதன்மைச் செயலாளர், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை இயக்குநர், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.